இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது. முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையில் பாஜக ஆட்சி தற்போது உள்ளது. அங்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாஜக, காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சியை பிடித்து வருகின்றன. இம்முறை இந்த ட்ரெண்ட்டை மாற்றி மீண்டும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் சூளுரைத்துள்ளார்.
அம்மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், பாஜக இன்று இமாச்சல மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைநகர் சிம்லாவில் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டு பேசினார். பெண்களுக்கு அதிகாரமளித்தலே கட்சியின் முக்கிய நோக்கம் என்ற ஜேபி நட்டா, நாங்கள் சொன்ன வாக்குறுதிகளையும் நிறைவேற்றினோம், சொல்லாததையும் செய்துள்ளோம் என்றார்.
இமாச்சலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாஜக தேர்தல் வாக்குறுதியில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. மேலும், மாநில இளைஞர்களுக்கு 8 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும், ஹிம்-ஸ்டார்ட் அப் திட்டத்திற்கு ரூ.900 கோடி ஒதுக்கப்படும் எனவும் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு 5 புதிய மருத்துவ கல்லூரிகள், கிராமப்புற இணைப்பிற்கு ரூ.5,000 கோடி முதலீடு என்பவையும் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் பெண்களுக்கு என பிரத்தியேக வாக்குறுதிகளை அறிவித்த பாஜக, அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றும் என உறுதி அளித்துள்ளது. மேலும், 6 முதல் 12 வகுப்பு மாணவிகளுக்கு சைக்கிள், உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஸ்கூட்டர் ஆகியவை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அம்மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துவிட்டது. அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1,500 உதவித்தொகை, பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வரும், இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பு போன்றவற்றை காங்கிரஸ் வாக்குறுதிகளாக வழங்கியுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் 68 தொகுதிகளுக்கு நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அன்றைக்கே அறிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க:
Share your comments