டெல்லியில் மோசமடைந்து வரும் காற்றுத் தரக் குறியீடு (AQI) மற்றும் அதிகரித்து வரும் மாசு அளவு ஆகியவற்றினால் தரப்படுத்தப்பட்ட பதில் செயல் திட்டத்தின் (GRAP) மூன்றாம் கட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளது டெல்லி மாநில அரசு.
இதன் மூலம் தேசிய தலைநகர் டெல்லியில் குறிப்பிட்ட ரக வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு அதிகப்பட்ச அளவிலான அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ள நிலையில் பலர் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
டெல்லியில் AQI 500-ஐ (AQI -air quality index) நெருங்கியுள்ளது. இந்த அளவீடு மிக அபாயகரமான மாசுபாடு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிக்கை வேற நெருங்கி வருவதால், மாசு அளவைக் குறைக்க மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
புதிய அறிவிப்பின் படி, எந்தெந்த வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படுகின்றன மற்றும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எவை தடைசெய்யப்பட்டுள்ளன என்பதன் விவரம் பின்வருமாறு-
BS3 பெட்ரோல் மற்றும் BS4 டீசல் வாகனங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை டெல்லி அரசு தடை விதித்துள்ளது. BS3 பெட்ரோல் அல்லது BS4 டீசல் சான்றிதழைப் பெற்ற பழைய கார் அல்லது இரு சக்கர வாகனம் உங்களிடம் இருந்தால், அவை தேசிய தலைநகரப் பகுதியின் சாலைகளில் இயங்க அனுமதிக்கப்படாது. இந்த கட்டுப்பாடு உத்தரவானது ஹரியானாவில் உள்ள குருகிராம் மற்றும் ஃபரிதாபாத் போன்ற அண்டை நகரங்களையும், உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மற்றும் நொய்டாவையும் உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
GRAP (Graded Response Action Plan) நிலை 3-ன் விளைவாக மேற்குறிப்பிட்ட வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றின் தரம் மேலும் மோசமாகும் பட்சத்தில் (நிலை 4) அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களைத் தவிர்த்து, டீசல் வர்த்தக வாகனங்களின் இயக்கத்திற்கு முழுமையான தடை வரலாம். BS4 டீசல் சான்றிதழுடன் பிற மாநிலங்களில் இருந்து தனியார் பேருந்துகள் டெல்லிக்குள் வருவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. நிலைமை மோசமடைந்தால், இந்த தடைகள் மற்ற வணிக வாகனங்களுக்கு விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கள், SUV-கள் அல்லது குறைந்தபட்சம் BS6 சான்றிதழைக் கொண்ட இரு சக்கர வாகனங்கள் உட்பட வாகனங்களின் உரிமையாளர்கள் GRAP நிலை-3 இன் போது வழக்கம்போல் இயக்க அனுமதிக்கப்படுகிறார்கள். மாசு சான்றிதழ்கள் (PUC) உடனடியாகக் கிடைக்கும்படி பரிந்துரைக்கப்படுகிறது. மின்சார அல்லது CNG வாகனங்களை வைத்திருக்கும் தனிநபர்கள் இந்த கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காற்றின் தரக் குறியீடு மோசமாகி உள்ளதால் வாகன ஒட்டிகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருப்பது ஒருபுறம் என்றால், பொதுமக்கள் சாலைகளில் நடமாட முடியாத வகையில் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இதையும் காண்க:
2000 ரூபாயை நெருங்கியது ஒரு சிலிண்டர் விலை- வியாபாரிகள் அதிர்ச்சி
யூனிட்டுக்கு 5 ரூபாய் 50 காசு- மின் கட்டண குறைப்பு இன்று முதல் அமல்
Share your comments