தமிழகத்தில் விரைவில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. கட்டணத்தை உயர்த்துவது குறித்து, அரசு அமைத்துள்ள வல்லுனர் குழு முழுவீச்சில் ஆய்வு செய்து வருகிறது. தினசரி நஷ்டம் எவ்வளவு; அதை சரிகட்ட பஸ் கட்டணத்தை எந்தளவுக்கு உயர்த்தலாம் என்பது குறித்த விபரங்களை, அனைத்து போக்குவரத்து கழகங்களிடம் இருந்து, இக்குழு திரட்டி வருகிறது. அதனடிப்படையில் பஸ் கட்டண உயர்வு குறித்து, அரசு விரைவில் முடிவெடுக்க உள்ளது.
தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 19 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றின் வாயிலாக, 1.50 கோடி பேர் பயணம் செய்து வருகின்றனர். அரசு பஸ்களை இயக்க தினமும், 17 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதாந்திர செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கூடுதல் செலவு (Extra Cost)
2021 - 22ம் நிதி ஆண்டில் மட்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 4,445 கோடி ரூபாய் கூடுதல் செலவாகி உள்ளது.மேலும், 2732 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் குறைவு. அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தான் கட்டணம் குறைவாக இருக்கிறது. தமிழக அரசின் சாதாரண கட்டண பஸ்களில், 1 கிலோ மீட்டருக்கு 58 காசு; 'எக்ஸ்பிரஸ்' 75 காசு; 'டீலக்ஸ்' 85 காசு; 'அல்ட்ரா டீலக்ஸ்' 1 ரூபாய்; 'ஏசி' 1.30 ரூபாய்; படுக்கை வசதியுடன் கூடிய, அல்ட்ரா டீலக்ஸ் 1.55 ரூபாய்; படுக்கை வசதியுடன் கூடிய 'ஏசி' பஸ்களில் 2 ரூபாய் என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை ஒப்பிடுகையில், 1 கிலோ மீட்டருக்கு, 8 முதல் 10 காசு வரையில் குறைவாகும். போக்குவரத்து கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்க, அரசு பல்வேறு புதிய முயற்சிகளை எடுக்க உள்ளது. தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் வாங்கி இயக்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
வருவாய் பெருக்க (Increase Income)
இதற்கிடையே, அரசு போக்குவரத்து கழகங்களின் இழப்பை சரிகட்ட, பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை வழங்க, புதிய வல்லுனர்கள் குழுவை அரசு சமீபத்தில் அமைத்துள்ளது. இதில், அரசு போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள், நிதித் துறை, சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலை போக்குவரத்து பொறியியல் நிபுணர்கள் உள்ளிட்ட எட்டு பேர்
உள்ளனர். இந்த குழு, எட்டு அரசு போக்குவரத்து கழகங்களிடம் இருந்து, அன்றாட செலவு, வருவாய், எரிபொருள் செலவு, மொத்த பயணியர் எண்ணிக்கை, இலவச பயணியர் எண்ணிக்கை, வருவாய்க்கும் செலவுக்கும் உள்ள இடைவெளி, கட்டண உயர்வு தவிர, மாற்று வழிகளில் வருவாய் பெருக்க உள்ள வாய்ப்புகள் குறித்த விபரங்களை சேகரித்து வருகிறது.
இந்த விபரங்களை சேகரித்து, அதனடிப்படையில் பஸ் கட்டணத்தை உயர்த்தலாமா? அப்படி உயர்த்தினால் எந்தளவுக்கு உயர்த்துவது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது. அதன்படி, பஸ் கட்டணம் உயர்வு தொடர்பாக, அரசு முடிவெடுத்து அறிவிக்க உள்ளது.
மேலும் படிக்க
Share your comments