சென்னையைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில், பேருந்து சேவை போதிய அளவு இல்லாததால், ஏழை மற்றும் எளிய மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இரவு நேரப் பேருந்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம், என அரசு ஆணை பிறப்பித்துள்ள நிலையில், இரவில் வேலை முடிந்து சற்று தாமதமாக வீடு திரும்ப பேருந்து வசதி இல்லாமல், அவதிப்படுகின்றனர்.
பேருந்து போக்குவரத்து (Bus Transportation)
சென்னையில் உள்ள பேருந்துகளில் தினமும், 28.70 இலட்சம் நபர்கள் பயணம் செய்கின்றனர். வேலை, தொழில் மற்றும் படிப்பு உள்பட பல காரணங்களால், தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள் மற்றும் நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களில் இருந்து, சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியேறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னை மாநகர் முழுதும் அனைத்து வழித்தடங்களிலும், போதிய அளவு பேருந்து சேவை இல்லாத காரணத்தால், மக்கள் தவித்து வருகின்றனர். அதே போல, தமிழகத்தை ஆட்சி செய்யும் தி.மு.க., அரசு, சாதாரண கட்டணப் பேருந்துகளில் பயணிக்க பெண்களுக்கு இலவசம் என அறிவித்தது. இது, பெண் பயணியர் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
தொடக்கத்தில் சாதாரண பேருந்துகள் முறையாக இயக்கப்பட்டது. ஆனால், சில நாட்களிலேயே அதன் சேவை படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், சாதாரண கட்டணப் பேருந்துகளை எதிர்பார்த்து மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள், பணிமனைகளில் நேரடி ஆய்வினை மேற்கொண்டு, ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும், கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு, பல பணிமனைகளிலும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பலர், நீண்ட நாள் விடுப்பில் செல்வது தொடர்கதையாகி உள்ளது. இதுதவிர, போதிய அளவு ஊழியர்கள் இல்லாத காரணத்தாலும், மாநகர பேருந்து போக்குவரத்து சேவையில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்து ஆணைப் பிறப்பித்தது. இது, பொருளாதாரத்தை மேம்படுத்தவும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலன் கருதியும் எடுக்கப்பட்ட முடிவு என்றாலும், அதற்கு ஏற்றார் போல், பொதுப் போக்குவரத்துக்கான பேருந்து வசதி செய்யப்படவில்லை.
இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில், இரவு 12 மணிக்கு மேல் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்படுகின்றது. இரவு நேரத்தில் பணி முடிந்து தாமதமாக வீடு திரும்புவோர், பேருந்து சேவையைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க
கோவையில் பிளாஸ்டிக் ரோடு: மாநகராட்சி திட்டம்!
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து வசதி: பெங்களூருவில் அறிமுகம்!
Share your comments