கொரோனா ஊரடங்கு (Corona Lockdown) விளைவுகளால், வெல்லம், நாட்டுச் சர்க்கரை விற்பனை விலை, தீபாவளிப் பண்டிகை காலத்திலும் சரிந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கடும் தவிப்பில் உள்ளனர்.
விலை சரிவு:
புதுச்சேரியில் காட்டேரிக்குப்பம், சந்தைப் புதுக்குப்பம், ஆண்டியார் பாளையம் போன்ற பல கிராமங்களில் நாட்டுச் சர்க்கரை (Jaggery Powder) மற்றும் வெல்லம் தயாரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, உற்பத்தி செய்யப்படும் நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம், புதுச்சேரி தொடங்கி திருவண்ணாமலை, சேலம், வேலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு தமிழக மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு (Sales) அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா ஊரடங்கு தொடங்கியதில் இருந்து நாட்டுச் சர்க்கரை, வெல்லம் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வழக்கமாக, ஆடி மாதங்களில் நடைபெறும் கோயில் திருவிழாக்கள், ஆடிப்பெருக்கு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் காரணமாக வெல்லம் ஆர்டர் அதிக அளவில் வரும். ஆனால், கொரோனா தொற்று அச்சம் காரணமாக ஆடி மாதத்திற்கான திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டு விலை சரிந்தது.
தீபாவளிப் பண்டிகை
தீபாவளிப் பண்டிகையையொட்டி, அதிக அளவில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் விற்பனையாகும் என்பதால் நிச்சயம் இத்திருவிழா காலம் கைகொடுக்கும் என்று நாட்டுச் சர்க்கரை, வெல்லம் உற்பத்தியாளர்கள் (Manufacturers) காத்திருந்தனர். கொரோனா தொற்று குறைந்து மக்கள் தீபாவளியை (Deepavali) வரவேற்கத் தயாராகியுள்ளனர். கடந்த ஆண்டு ரூ.1,900-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 30 கிலோ வெல்லம் மூட்டைகள், இந்த ஆண்டு விலை மிகவும் சரிந்து ரூ.1,300-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆள் பஞ்சம் ஒரு புறம், கஷ்டப்பட்டு தயாரித்தாலும் வியாபாரிகள் வாங்க வரவில்லை. மர அச்சு எல்லாம் தயாரித்து இம்முறை வெல்லம், நாட்டுச் சர்க்கரை தயாரித்தோம். ஆனால், தீபாவளிக்கு நஷ்டம் (Loss) தான் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. சந்தையிலும் விலைபோவது குறைந்துள்ளது.
ஆர்டர்கள் குறைவு:
தீபாவளிக் காலத்தில் நல்ல விற்பனை இருக்கும். ஆனால் இம்முறை மிகவும் ஏமாற்றம்தான் என்கின்றனர் உற்பத்தியாளர்கள். தீபாவளிக் காலத்தில் நிச்சயம் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து உழைத்தார்கள். ஆனால், கடந்த ஆண்டு போன்று ஆர்டர்கள் சரியாக வரவில்லை. இதனால், நாட்டு வெல்லம் தயாரிப்புத் தொழில் பாதிக்கப்பட்டு வருவதுடன், இனிப்பான பொருளைத் தயார் செய்யும் இவர்களின் வாழ்க்கை இந்த ஆண்டு கசப்பாக மாறியுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தீபாவளி ஸ்பெஷல்!பானை செய்யும் தொழிலாளி கண்டுபிடித்த மேஜிக் விளக்கு! குவியும் ஆர்டர்கள்!
தீபாவளிக்கு உள்ளூர் தயாரிப்புகளை பயன்படுத்த வேண்டுமென, மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்!
Share your comments