நதிகளை இணைத்தால் விவசாயத் தேவைக்கும், குடிநீர்த் தேவைக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படாது என்பதால், கடந்த பல வருடங்களாக நதிகளை இணைக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். பல ஆண்டு கால கோரிக்கைக்கு இன்று முதல் படியாக நதிகள் இணைப்பு திட்ட (Rivers Link Project) முதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.6,941 கோடி மதிப்பில் நதிகள் இணைப்பு திட்ட முதல் கட்டிடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி (CM Palanisamy) அடிக்கல் நாட்டினார்.
100 ஆண்டு கால கனவு
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட (Rivers Link Project) முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். வெள்ளக் காலங்களில் காவிரியில் (Cauvery) உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது.
விவசாயத்திற்குப் பாசன வசதி
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் (Cauvery-Vaigai-Gundaru Link Project) மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 69 ஆயிரத்து 962 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி (Irrigation) பெறும். இந்த திட்டம் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டையில் குடிநீர் ஆதாரம் மேம்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் (Ground water) உயரும். விவசாயிகளின் பல ஆண்டு கனவை நிறைவேற்றும் விதமாக இன்று, தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டியிருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. விரைவில் இத்திட்டம் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மத்திய அரசின் புதிய PLI திட்டம்! ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு
மகளிர் சுய உதவிக் குழுவில் வீட்டிற்கு ஒரு பெண்! ஏழைப் பெண்களை தொழில்முனைவோராக்கும் முயற்சி!
Share your comments