1,தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை-மதுரை மாவட்ட ஆட்சியர்
சமீபத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனீஸ்சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் பேசுகையில், மார்ச் 1 முதல் மோவோகுரோட்டோபாஸ், ப்ரோபெனோபோஸ், அசிபேட், குளோரிபைரிபாஸ், ப்ரோபெனோபோஸ்- சைபர்மெத்ரின், குளோரிபைரிபாஸ் - சைபர்மெத்ரின் ஆகிய ஆறு பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யவோ, இருப்பு வைக்கவோ, 60 நாட்களுக்கு தமிழக அரசு தற்காலிகமாக தடை வி்தித்துள்ளது. இவற்றுடன் 3 சதவீத மஞ்சள் பாஸ்பரஸ் உள்ள ரடோல்பேஸ்ட் பூச்சிக்கொல்லி மருந்துக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினை மீறி தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேற்குறிப்பிட்ட பூச்சி கொல்லி மருந்துகள் மண் மற்றும் சுற்றுச்சூழலுக்குகேடு விளைவிப்பதால் தான் அரசு தடை விதித்துள்ளது எனவும், இவற்றினை விவசாயிகள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் ஆட்சியர் வலியுறுத்தினார்.
2,காவிரி உபரி நீர் திட்டம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை!
காவிரி உபரி நீர் திட்டம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தவறிவிட்டதாக தர்மபுரி விவசாயிகள் கூறியதுடன், கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட 2023-24ம் ஆண்டுக்கான விவசாய பட்ஜெட்டில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உபரி நீர் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், மழைக்காலத்தில் பாயும் உபரி நீர், மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டு, நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் வகையில் அமையும். ஆனால், இதுவரை அரசு தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை எனக் கவலை தெரிவித்துள்ளனர்.
3,அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் நிறைவு
அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி ஈரோட்டில் சனிக்கிழமை தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வருவதை அமைச்சர் சனிக்கிழமை மாலை பார்வையிட்டார்.
4,பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், சென்னையில் தொடர்ந்து 310-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்கப்படுகிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
5,அயிரைமீன் கிலோ ரூ.2200 க்கு விற்பனை
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் குளங்களில் நீர் வற்றி உள்ளதாலும், வரத்து குறைவாலும் அயிரை மீன்களின் விலை உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிலோ ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.200 அதிகரித்து ரூ.2,200-க்கு விற்பனை ஆனது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயிரை மீன் விலை ரூ.1300 முதல் ரூ.1,500 வரை விற்கப்பட்டது. தற்போது வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. அதேபோல விரால் மீன் ஒரு கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. அயிரை மீன் விலை உயர்வால் மீன் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
6,முல்லைப்பூ ரூ.650 க்கு ஏலம்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று காலை 7 மணிக்கு பூக்கள் ஏலம் தொடங்கியது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் 2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.455-க்கும், முல்லை ரூ.680-க்கும், காக்கடா ரூ.325-க்கும், செண்டுமல்லி ரூ.95-க்கும், பட்டுப்பூ ரூ.80-க்கும், கனகாம்பரம் ரூ.360-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும், அரளி ரூ.80-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் ஏலம் போனது.
7,கிருஷி சன்யந்திர மேளா மூன்றாம் நாள் நிகழ்வு
கிருஷி சன்யந்திர மேளா இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று நடைப்பெற்றது. முதல் அமர்வில் சிறந்த விவசாய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் விவரங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு STIHL/SANY இண்டஸ்ட்ரீஸால் நடத்தப்பட்டது. இரண்டாவது அமர்வை வாவ் மோட்டார்ஸ்/வேர் எனர்ஜிஸ் கிசான் நடத்தியது. மேலும், இந்நிகழ்வின் போது விவசாயத்துறையில் சிறப்பாக பங்கேற்றி மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கிய 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர்.இன்று கடைசி நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
என்னது கருப்பு உருளைக்கிழங்கா! கிலோ 500 ரூபாயா! சாதித்த விவசாயி!
தண்ணீர் பாய்ச்சுற கவலை இனி வேண்டாம்.. கல்லூரி மாணவர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு
Share your comments