மத்திய அரசின் வேளாண் வணிக காப்பகம் எனும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தில் பயிற்சி முடித்த தொழில்முனைவோருக்கு 1.31 கோடி ரூபாய் மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் ராஷ்டிரிய க்ரிஷி விகாஸ் யோஜனா – வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை புத்துணர்ச்சிக்கான ஊதிய அணுகுமுறைகள் – வேளாண் வணிக காப்பகம் எனும் திட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக இயக்குனரகத்தின் மூலம், செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இங்கு, தொழில்நுட்ப வணிக காப்பகத்தில் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் புதிய வேளாண் தொழில் முனைவோருக்கும் மற்றும் வேளாண் தொழில்நுட்பங்களுடைய ஆரம்ப கட்ட நிறுவனங்களுக்கும் இரண்டு மாத பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த இரண்டு பயிற்சியிலும் பங்கு பெற்றோருக்கு பயிற்சி காலத்தில் மாதம் ஒன்றுக்கு 10,000ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் பங்கேற்ற 6 வேளாண் தொழில் முனைவோருக்கு மானியத் தொகையாக ரூ.21.50 லட்சமும், 8 வேளாண் ஆரம்ப கட்ட நிறுவனங்களுக்கு மானியத் தொகையாக ரூ.110 லட்சமும் மத்திய அரசின் வேளாண் அமைச்சகம் அறிவித்துள்ளது.
தேர்வு செய்யப்பட்ட புதிய வேளாண் தொழில் முனைவோர், உணவு பதப்படுத்துதல், வாழை நார் பொருட்கள், மதிப்புக்கூட்டல், பண்ணை இயந்திரமயமாக்கல், தகவல் தொழில்நுட்பம், கரிம வேளாண்மை மற்றும் அதன் தயாரிப்புகள், வேளாண் கழிவுகளில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் பொருட்கள் ஆகிய தொழில்களில் புதுமை படைக்க உள்ளனர்.
2019-20ல் தேர்வான வேளாண் தொழில் முனைவோர்களுக்கு மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் நிதி உதவியில் முதல் தவணையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், முனைவர் நீ.குமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் அ.சு.கிருட்டிணமூர்த்தி, பல்கலைக்கழக வணிக மேலாண்மை இயக்குநர் முனைவர் சே.தே.சிவக்குமார் மற்றும் பல்கலைக்கழக அலுவலர்கள் பங்கேற்றனர்.
மேலும் படிக்க...
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பஞ்சகவ்யா விற்பனைக்கு! விவசாயிகள் கவனத்திற்கு
Share your comments