1. செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு!

R. Balakrishnan
R. Balakrishnan
Reduces petrol and diesel prices

தீபாவளி பண்டிகையை ஒட்டி, பெட்ரோலுக்கு ரூ.5ம், டீசலுக்கு ரூ.10ம் விலையை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கால் (Corona Curfew) பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின.

பெட்ரோல் விலை

குறிப்பாக, கொரோனா 2ம் அலை ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் (Petrol) லிட்டருக்கு ரூ.100 விலையை தாண்டியது. வரலாறு காணாத விதமாக மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120ஐ தொட்டது. இதே போல, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.100ஐ தொட்டது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்தன.

தீபாவளி பரிசு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் கூட பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களும், ஒன்றிய அரசும் குறைக்கவில்லை. சாமானிய மக்களின் சிரமத்தை குறைக்க, தமிழக அரசு பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைத்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு கீழ் குறைந்தாலும், அதன் பின்னரும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்ததால் மீண்டும் ரூ.100 ஐ தாண்டியது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 31 நாளில் 24 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை ஏற்றத்தால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பெட்ரோல் 26 நாளில் ரூ.8.20ம், டீசல் 8.65ம் விலை அதிகரித்துள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பின்றி, தொழில் சுணக்கத்தால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மிகப் பிரச்னையாக வெடித்தது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக நேற்றிரவு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, பெட்ரோலுக்கான கலால் வரியில் ரூ.5ம், டீசலுக்கான கலால் வரியில் ரூ.10ம் ஒன்றிய அரசு குறைத்துள்ளது.

இந்த உத்தரவு நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, இன்று அதிகாலையில் இருந்து நாடு முழுவதும் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5ம், டீசல் லிட்டருக்கு ரூ.10ம் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நேற்று 2% குறைந்ததைத் தொடர்ந்து ஒன்றிய அரசு கலால் வரி குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை குறைப்பால், அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

உயர்த்தியது எவ்வளவு? குறைத்தது எவ்வளவு?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. ஆனால், கச்சா எண்ணெய் விலை குறையும்போது கூட, அதன் பலன் மக்களுக்கு கிடைக்காத வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒன்றிய அரசு உயர்த்தி வந்தது. 2014ம் ஆண்டில் பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு பதவி ஏற்றதில் இருந்து பல முறை கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு  ரூ.9.48 என இருந்தது. இது ரூ.32.90 ஆக உயர்ந்தப்பட்டது.

அதாவது சுமார் மூன்றரை மடங்கு உயர்ந்து விட்டது.  இதுபோல், டீசல் மீதான கலால் வரி 2014ம் ஆண்டுக்கு பிறகு 9 முறை உயர்த்தப்பட்டது. 2014ல் டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.3.56 ஆக இருந்தது. இது ரூ.31.80 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், இவ்வாறு பல முறை உயர்த்தப்பட்ட பிறகு, தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.5 மற்றும் டீசலுக்கு ரூ.10 மட்டும் குறைக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு குறையும்?

சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.66க்கும், டீசல் ரூ.102.59க்கும் விற்கப்பட்டது. கலால் வரி குறைப்புக்குப் புதிய  விலைப்பட்டியல்:

நகரம்    பெட்ரோல் (ரூபாயில்)    டீசல் (ரூபாயில்)

சென்னை    101.66    92.59

டெல்லி    105.04    88.42

மும்பை    10.5.85    96.62

Read More

காவலர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!
LIC-யின் இந்த பாலிசியில் 12 ஆம் வகுப்பு வரை ஊக்கத்தொகை!

English Summary: Central government reduces petrol and diesel prices ahead of Diwali Published on: 04 November 2021, 01:33 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.