வெங்காயத்தின் விலை உள்நாட்டு சந்தைகளில் அதிகரிப்பதை தடுக்கும் விதமாக அவற்றின் மீதான ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை ஒன்றிய அரசு சனிக்கிழமை விதித்துள்ளது. இந்த வரி விதிப்பானது டிசம்பர் 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஒன்றிய அரசின் சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் பாஸ்மதி அல்லாத சில வெள்ளை நிற அரிசி வகைகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பரில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயரக்கூடும் என்ற எச்சரிக்கையினை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகை காலம் நெருங்கும் வகையில் உள்நாட்டு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வினை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அக்டோபரில் புதிய பயிர் சந்தைக்கு வரத் தொடங்கும் வரை விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க சில பிராந்தியங்களில் வெங்காயத்தை அதன் சேமிப்புக் கிடங்கிலிருந்து விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது 3 லட்சம் டன் வெங்காயத்தை அரசாங்கம் இருப்பு வைத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி வெங்காயத்தின் தேசிய சராசரி சில்லறை விலை கிலோ ரூ.30.50 ஆக இருந்தது.ஆனால் சில இடங்களில் வெங்காயத்தின் விலை ரூ.50-க்கு மேல் இருந்தது. டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி வெங்காயத்தின் சராசரி விலை கிலோவுக்கு ரூ.35 ஆக இருந்தது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த விலையை விட ரூ.7 அதிகம். இந்தியா 2022-23 ல் 576.79 மில்லியன் டாலர் மதிப்புள்ள வெங்காயத்தை ஏற்றுமதி செய்துள்ளது.
2024 ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் மாதத்தில், 6.3 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயத்தை 120.71 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஜூன் மாதத்தில் 4.9 சதவீதமாக இருந்த சில்லறை பணவீக்கம் ஜூலையில் 7.44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மாதந்தோறும் 38 சதவீதமும், ஆண்டுக்கு ஆண்டு 37 சதவீதமும் அதிகரித்த காய்கறிகளின் விலை கணிசமான அதிகரிப்பால் பணவீக்க உயர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரிரு மாதமாக வட மாநிலங்களில் எதிர்ப்பாராத கனமழை, தென் மாநிலங்களில் மழை பொய்த்து கடும் வெப்பம் என காலநிலை மாற்றத்தினால் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டது.
தினசரி பயன்படுத்தும் தக்காளி விலை உயர்வினால் பொதுமக்கள் பெரும் அவதியுற்ற நிலையில் தற்போது தான் நிலைமை சீராகி உள்ளது. இந்நிலையில் அடுத்த சுமையாக வெங்காயம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் இந்த ஏற்றுமதி வரி உயர்வு கைக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!
மேலும் காண்க:
காத்திருந்து.. காத்திருந்து.. சம்பா சாகுபடியும் விவசாயிகளும்!
நீட் தேர்வுக்கு எதிரான திமுக போராட்டம்- மணக்கோலத்தில் வந்த தம்பதி
Share your comments