தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு விவரம் பின்வருமாறு:
04.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
05.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
06.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
07.07.2023 மற்றும் 08.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். அவற்றில் மீனவர்களுக்கான எச்சரிக்கை பதிவும் வெளியிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி முனைவர் கீதா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
Share your comments