தமிழகத்தில் 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு விளக்குகின்றது.
இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "மேற்குதிசை காற்றினுடைய வேகத்தின் மாறுபாடு காரணமாக, (16-07-2022) இன்று தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமானது வரை மழையானது பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 17, 18 ஆகிய நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
19, 20 ஆகிய இரு நாட்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதோடு, நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில்17, மேல் பவானியில் 10, நடுவட்டம் பகுதியில் 9 செ.மீ மழையும், சின்னகல்லாரில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை:- 16-07-2022 மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
16-ஆம் தேதியான நாளை கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, மேல் கூறப்பட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்த்தல் வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க
Share your comments