கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பீளமேடு பகுதியில் இருந்த ரேஷன் கடை ஒன்றின் ஆய்வு செய்த போது அங்கிருந்த பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்தார்.
பின்னர் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். அப்போது பயோமெட்ரிக் கருவிகள் அடிக்கடி வேலை செய்வதில்லை என்றும் வயதானவர்கள் பலருக்கு பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் மக்கள் குறைகளை தெரிவித்தனர்.
ரேஷன் கடை (Ration shop)
இதனை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் மொத்தம் 2.21 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 34,777 ரேஷன் கடைகள் உள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு உள்ள வசதிகளை முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி தொடர் ஆய்வு செய்து வருகின்றோம். அதில் ஒரு சில ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் பிரச்சனை மற்றும் தரமற்ற பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் நியாய விலைக் கடைகளில் விற்பனை ஆகாத பழைய அரிசி உள்ளிட்டவற்றை உடனே குடோனுக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நியாயவிலை கடைகளில் பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களை கண்டறிந்து அவர்களை நீக்கும் நடவடிக்கை தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு இடங்களில் மாதிரி கடைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது .தற்போதைய கடைகளை நவீன தளத்தில் மாற்ற முதல்வரிடம் அனுமதி கேட்கப்படும். மேலும் அமுதம் காமதேனு கடைகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
Share your comments