நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கு, பணம் வசூல் செய்யப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தஞ்சையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், தண்ணீரை தனியாருக்கு, விற்பனை செய்வதற்காக மத்திய அரசு தண்ணீர் கொள்கை 2012 என்கிற அரசாணை பிறப்பித்தது.
நிலத்தடி நீர் (Ground Water)
இதற்கு எதிர்த்து தொடர்ந்து போராடி வந்த நிலையில், வீட்டுக்கு பயன்படுத்தும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு, மத்திய அரசின் ஜல்சக்தி துறைக்கு 3 மாதத்திற்குள்ளாக தலா ரூ. 10 ஆயிரம் செலுத்த வேண்டும். பணத்தை செலுத்தி தான் நிலத்தடி நீரைக் குடிநீருக்காக பயன்படுத்துகிறேன் என்பதை பதிவு செய்ய வேண்டும் என விளம்பரப்படுத்தி இருக்கிறது. இது வன்மையாக கண்டிக்க கூடியது. இந்த நடவடிக்கை என்பது குடியரசுக்கு எதிரானது. இது தனிமனித உரிமையை பறிக்கும் செயலாகும்.
இது குறித்து தமிழக அரசு வாய்மூடி மௌனமாக இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கான போராட்டத்தை தீவிர படுத்துவோம். தமிழக அரசு இதை மூடி மறைக்க முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் வருகிறது. தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
மேலும் படிக்க
Share your comments