சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, தமிழகம் முழுதும் நெடுஞ்சாலை ஓரங்களில் 600க்கும் மேற்பட்ட 'சார்ஜிங்' மையங்களை அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், மூன்று கோடி வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதனால், எரிபொருள் தேவை; அவற்றின் இறக்குமதி அதிகரித்துள்ளது. முக்கிய நகரங்களில் காற்று மாசும் அதிகரித்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மின்சார வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையகங்கள், உபயோகிப்பாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
சார்ஜிங் மையங்கள் (Charging Centers)
தமிழகத்தில், 30 ஆயிரம் வாகனங்கள் உட்பட, நாடு முழுதும், மூன்று லட்சம் மின்சார வாகனங்கள் வரை பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால், அவற்றுக்கான சார்ஜிங் மையங்கள் அதிகம் இல்லாததால், மின்சார வாகனங்கள் வாங்க, பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதையடுத்து, நாடு முழுதும் அதிக சார்ஜிங் மையங்களை அமைக்க, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஊக்கம் அளித்து வருகிறது.
தமிழகத்தில், முக்கிய நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ.,க்கு ஒரு சார்ஜிங் மையம் அமைக்கப்பட உள்ளது. இதுதவிர, வாகனங்களை அதிகம் நிறுத்தும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் என, இந்தாண்டுக்குள் 600 சார்ஜிங் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கட்டணம் குறையும் (Charges Reduced)
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: பொது போக்குவரத்தில் அதிக மின்சார வாகனங்களை பயன்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டுள்ளன. இதற்காக வங்கிக் கடன் வழங்குவது, வாகனங்களை வாடகைக்கு வழங்குவது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கு, சார்ஜ் செய்ய தற்போது ஒரு யூனிட்டுக்கு 15 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்தாண்டுக்குள் அதிகளவில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டால் கட்டணம் குறையும்.
மேலும் படிக்க
Share your comments