இலண்டனில் உள்ள பசுமை அமைப்பு சார்பில் 2023 ஆம் ஆண்டிற்கான கிரீன் ஆப்பிள் விருது நிகழ்வு நடைப்பெற்றது. இந்த நிகழ்வில் கார்பன் குறைப்பு பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்துக்கு தங்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் மாசுபாட்டினை கட்டுக்குள் வைக்கும் வகையில் பொது போக்குவரத்தினை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்த அரசின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சென்னை போன்ற மாநகரங்களில் மெட்ரோ சேவையினை பொதுமக்கள் பயன்படுத்தும் தன்மையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் ( நவம்பர் 20) இங்கிலாந்தின் லண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் நடைபெற்ற க்ரீன் ஆப்பிள் சுற்றுச்சுழல் விருது ( Green Apple Environment Awards) நிகழ்வில் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தங்கம் வென்றுள்ளது. CMRL சார்பாக இந்த நிகழ்வில் பங்கேற்ற டாக்டர் ராஜீவ் கே ஸ்ரீவஸ்தவா, ஐஎஃப்எஸ் (ஓய்வு), தலைமை ஆலோசகர் (சுற்றுச்சூழல்), சிஎம்ஆர்எல் நிறுவனம் விருதினை பெற்றுக்கொண்டார்.
இந்த மதிப்புமிக்க விருது, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கும், நகர்ப்புற போக்குவரத்துத் துறையில் நிலையான நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் CMRL இன் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது என சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் தரத்தை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் வளங்களை பாதுகாத்தல், சூரிய சக்தியை அதிக அளவில் பயன்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த சுற்றுச்சூழல் ரீதியாக தோட்டங்களை உருவாக்குதல் போன்ற சுற்றுச்சூழல் முயற்சிகளிலும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற இதே International Green Apple Awards நிகழ்வில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சிறந்த பயிற்சி (Environmental Best Practice) மற்றும் கார்பன் குறைப்பு பிரிவில் (Carbon Reduction) வெண்கலப் பதக்கத்தை CMRL வென்றது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் லண்டன், யுனைடெட் கிங்டமில் உள்ள பசுமை அமைப்பிலிருந்து 2023 ஆம் ஆண்டுக்கான பசுமை உலக விருது அறிவிக்கப்பட்டது. இதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் வெள்ளி வென்றது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் அக்டோபர் முடிய, சுமார் 7,51,67,277 பயணங்கள் சென்னை மெட்ரோ இரயில் மூலம் நடைப்பெற்றுள்ளது. சென்னையில் மெட்ரோ இரயில் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வரும் நிலையில் இனி வரும் காலங்களில் சென்னையின் பிராதான போக்குவரத்து சேவையாக சென்னை மெட்ரோ இரயில் மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதையும் காண்க:
உட்கார்ந்த இடத்தில் நில அளவைக்கு விண்ணப்பிக்கவும்- சூப்பர் அறிவிப்பு
உலகளவிலான பசுமை விருதை தட்டித் தூக்கிய சென்னை மெட்ரோ நிறுவனம்!
Share your comments