சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ததால் மிதமான சூழல் நிலவுகிறது. வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் மழை நீடிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
தென்மேற்கு பருவ காற்றின் சாதகப்போக்கு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீண்டும் மழை பெய்வது அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.
சென்னையில் நேற்று காலை நேரம் வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் வானம் கும்மிருட்டாக மாறி மழை கொட்டியது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, போரூர், வளசரவாக்கம், பூவிருந்தவல்லி, அம்பத்தூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பரவலாக மழை பெய்தது, இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருத்தணி, ஆர்.கே பேட்டை, கனகமாச்சித்திரம் உள்ளிட்ட இடங்களில் மாலையில் கனத்த மழை பெய்தது.
மேலும் வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்புள்ளது. அதிக பட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்ஸியஸ், குறைந்த பட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்ஸியஸ் பதிவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரம் படி நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செ.மீ மழையும், கோவை சின்னக்கல்லாறு பகுதியில் 3 செ.மீ மழையும், வால்பாறை தாலுகா அலுவலகம் பகுதியில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments