அண்மையில் அதிதீவிர புயலாக கரையைக் கடந்த நிவர் புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து வலுவிழந்த புயலாக கரையைக் கடந்த புரெவி புயலாலும் தமிழகமெங்கும் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த புயல்களில் சிக்கி உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு நிவாரண நிதியுதவி வழங்கி முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்ககையில், ''புரெவி புயலின் தாக்கத்தால், கடந்த 3.12.2020 அன்று பெய்த அதீத மிக கனமழை மற்றும் 4.12.2020 அன்று பெய்த மிக கனமழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் இன்று (5.12.2020) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்திய வானிலை ஆய்வு மையம், 3.12.2020 அன்று இரவு பாம்பன் - கன்னியாகுமரி அருகில் புரெவி புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து, உடனடியாக போர்க்கால அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன.
இப்புயலின் காரணமாக, கடலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புரெவி’ புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில், கடற்கரையோரங்களில் மற்றும் ஆற்றோரங்களில் வசிக்கும் 36,986 எண்ணிக்கையிலான நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 363 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்
புயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க எனது தலைமையிலான அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் புரெவி புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இறந்த பசுமாடுகளுக்கு தலா ரூ.30,000/-
மேலும், இப்புயல் மற்றும் கன மழை காரணமாக 37 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள் மற்றும் 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீடுகள் & மின்கம்பங்கள் சேதம்
புரெவி புயல் காரணமாக 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1,725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 8 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும். புரெவி’ புயல் காரணமாக, சாலைகளில் 66 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. புரெவி’ புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 27 மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மின் வயர்கள் சேதமடைந்துள்ளன.
பயிர் சேதத்திற்கு இழப்பீடு
“புரெவி" புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இது மட்டுமின்றி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத் தரவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
சென்னை மாநகராட்சியிலும், இதர மாவட்டங்களில் உள்ள நகர்புறப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற நான் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன். தொலைத் தொடர்பு கருவிகள் மூலம் தொடர்புகொண்டு, மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்
பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகளில் போதுமான அளவு இருப்பு வைத்துக் கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நீர் நிலைகளின் ஓரம் மற்றும் கடற்கரையோரங்களில் மக்கள் கூடாமல் கண்காணிக்க காவலர்கள் / வருவாய்த்துறை அலுவலர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அதிகாரபூர்வ மற்றும் நம்பத்தகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்குமாறும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
“நிவர்' மற்றும் ‚புரெவி'' புயல் மற்றும் கன மழையினால் பாதிப்படைந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை மேற்கொண்டு, இயல்பு நிலைக்கு கொண்டு வர மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அதிகாரிகளும், அனைத்துத் துறை பணியாளர்களும் துரிதமாக பணியாற்ற நான் உத்தரவிட்டுள்ளேன்.'' என முதல்வரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.5000 மானியம்!!
TNAUவின் புதிய பயிர் வளர்ச்சி ஊக்கி தொழில்நுட்பம்- காப்புரிமை வழங்கியது மத்திய அரசு!
பயனாளிகள் ரெடி! - ஜனவரிக்குள் விலையில்லா ஆடு மாடுகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு!
Share your comments