தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் பகுதியில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் திருவாரூர் கிடங்கு வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களைச் சேமித்து வைத்திடும் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலமாக அதிக அளவில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 105.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மொத்தம் 1,42,450 மெ.டன் கொள்ளளவுடன் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையுடன் கூடிய 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (11.2.2023) அன்று காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இந்நிலையில், திருவாரூர் கிடங்கு வளாகத்தில் 2.35 கோடி ரூபாய் செலவில் 4250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்பு நிலையத்திற்கு நேற்று (21.2.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நெல்மணிகளை இயற்கைப் பேரிடர் மற்றும் மழைப் பொழிவுகளிலிருந்து பாதுகாப்பாக கிடங்குகளில் சேமித்து வைத்திட வேண்டும் என்றும், நெல்மணிகளில் ஈரப்பதம் ஏற்படாமல் நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அங்கியிருந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இச்சேமிப்பு நிலையத்தில் தற்போது 1500 மெட்ரிக் டன் நெல் சேமிக்கப்பட்டுள்ளது என்றும், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரையுடன் கூடிய நவீன நெல் சேமிப்புத் தளம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்த அலுவலர்கள் முதல்வரிடம் தெரிவித்தனர்.
அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் தன்னுடைய Tablet-இல் உள்ள முதலமைச்சரின் தகவல் பலகையில் (CM dashboard) திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார். மேலும், விரைந்து நடைபெற வேண்டிய பணிகளைச் சுட்டிக்காட்டி அவற்றை எவ்வித தாமதமுமின்றி துரிதமாக முடித்திடவும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சாருஸ்ரீ, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க :
அம்பாசமுத்திரம் பகுதியில் 7 கோடி மதிப்பில் உயிர்ப்பன்மை அருங்காட்சியகம் மற்றும் பாதுகாப்பு மையம்
Share your comments