தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலி, ஏழாவது ஊதியக்குழுவின் திருத்திய ஊதிய விகிதம் மற்றும் 20 சதவீத போனஸ் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியவர்களுக்கு நீலகிரி மாவட்டத்தின் வனப் பகுதிகள் மற்றும் பிற பொருத்தமான பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பு அளிப்பதை நோக்கமாகக்கொண்டு, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகமானது (TANTEA) 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்தில் நிலவும் கடுமையான நிதி நெருக்கடிக்கிடையிலும், ஓய்வுபெற்ற தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியப் பணப்பலன்களை வழங்கும் பொருட்டு ஏற்கனவே ரூ.29.38 கோடியினை வழங்கிட முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில், 1,093 பணியாளர்கள் பயனடைந்துள்ளனர்.
தினக்கூலி உயர்வு: இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு தாங்கள் பெற்று வரும் தினக்ககூலி ரூ.375/ஐ திருத்தியமைக்கப்பட்ட தினக்ககூலியை நடைமுறைப்படுத்தும் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், தனியார் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, நானொன்றுக்கு ரூ.438/-ஆக உயர்த்தி வழங்கிட வேண்டுமென்று நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்த முதல்வர் தனியார் தோட்டத் தேயிலை தொழிலாளர்களுக்கு இணையாக தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கும் திருத்தியமைக்கப்பட்ட தினக்கூலியாக நாளொன்றுக்கு ரூ.438/- வழங்கிடவும், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்திடவும் உத்தரவிட்டுள்ளார். இதற்கான தொடர் செலவினம் ஆண்டொன்றுக்கு ரூ.7.78 கோடி ஆகும்.
20 சதவீதம் – தீபாவளி போனஸ்:
அதோடு, TANTEA தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகப் (TANTEA) பணியாளர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருத்திய ஊதிய விகிதங்களை அமல்படுத்துவதற்கான ஆணைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு அவை நடைமுறைப்படுத்தாமல் இருந்தது.
இவை முதலமைச்சரின் கவனத்திற்கு வந்ததையடுத்து, TANTEA பணியாளர்களுக்கு திருத்திய ஊதிய விகிதங்களை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்காக TANTEA-க்கு கூடுதலாக 12.78 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். இந்த திருத்திய ஊதிய விகிதம் நடைமுறைபடுத்தப்படுவதால் 212 பணியாளர்கள் பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி ஓய்விற்குப் பிறகும் தங்களுடைய குடியிருப்புகளை காலி செய்யாத தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்கள் நலன் கருதி, நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தால் கட்டப்பட்டு வரும் ரூ.14 இலட்சம் மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்புக்கான பயனாளிகளின் பங்களிப்பை அரசே ஏற்க முடிவு செய்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மேற்காணும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இடம்பெயர ஏதுவாக, முதலமைச்சர் அவர்கள் குடியிருப்புகளின் பயனாளிகள் பங்களிப்பாக ரூ.3.46 கோடியை ஒரு சிறப்பு நிகழ்வாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் காண்க:
இடம் நகராத காற்றழுத்த தாழ்வு- 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Share your comments