கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் (Co-operative Jewellery Loans) தள்ளுபடி சலுகை பெறுவதற்காக, ஒரே நபர் வெவ்வேறு வங்கிகளில் கடன் வாங்கியது, போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றது என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இது குறித்து, 100 சதவீதம் ஆய்வு செய்ய குழு அமைத்து, தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், அ.தி.மு.க., ஆட்சியில், 2011 முதல் 2021 மார்ச் வரை 6.61 கோடி பேருக்கு 2.65 லட்சம் கோடி ரூபாய் தங்க நகைக் கடன்கள் வழங்கப்பட்டன.
நகைக் கடன்கள் தள்ளுபடி
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய, 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்கள் தள்ளுபடி (Jewellery Loans) செய்யப்படும்' என, தி.மு.க., சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியையும் பிடித்தது. இதனால், நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், 5 சவரன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை, 110 விதியின் கீழ், முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இது தொடர்பாக, 5 சவரன் வரை கடன் பெற்றவர்களின் விபரங்களை கூட்டுறவு துறை சேகரித்தது. அதில், 61 லட்சம் பேர், 17 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றது தெரியவந்தது.
முறைகேடு
மேலும், தள்ளுபடி சலுகைக்காக ரேஷன் கார்டில் இடம் பெற்றுள்ள ஒரே குடும்ப உறுப்பினர்கள், பல வங்கிகளில் நகைக் கடன் பெற்றது; ஒரே நபர் பல கிளைகளில் கடன் பெற்றது; போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்திருப்பதும் கண்டறிய பட்டன.இதையடுத்து, 5 சவரனுக்கு மேற்பட்ட நகைகளுக்கு கடன் பெற்றவர்களிடம் கடன்களை வசூல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும்; தவணை தவறி இருப்பின், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுத்து வசூலிக்குமாறும், கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டிருந்தார்.
நகைக் கடன் முறைகேடில், சங்க தலைவர்களாக உள்ள அரசியல் கட்சியினருக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.இதையடுத்து, கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்டுள்ள அனைத்து பொது நகை கடன்கள் தொடர்பாக, ஒரு மண்டல அதிகாரிகள், மற்றொரு மண்டலத்திற்கு சென்று, 100 சதவீத ஆய்வு மேற்கொள்ள கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
உதாரணமாக, திருச்சியில் உள்ள அதிகாரிகள் அரியலுாருக்கும்; நீலகிரி, ஈரோட்டில் உள்ள அதிகாரிகள், கோவையிலும் ஆய்வு செய்ய வேண்டும்.இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக, 5 சவரனுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட பொது நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என, சட்டசபையில் முதல்வர் அறிவித்தார்.
புகார்கள்
இந்நிலையில், நகை கடன்கள் வழங்கியதில், பல முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் (Complaints) எழுந்துள்ளன.எனவே, கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அனைத்து பொது நகை கடன்களையும், 100 சதவீதம் ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம். கூட்டுறவு நிறுவனங்களில் நடப்பாண்டு மார்ச், 31 வரையிலான நிலுவை கடன்கள்; ஏப்ரல் 1 முதல் ஆய்வு நாள் வரை நிலுவையில் உள்ள நகை கடன்களையும், 100 சதவீதம் ஆய்வு செய்ய வேண்டும்.
இதற்கான ஆய்வு குழுவில், கூட்டுறவு சார்பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், கள மேலாளர், நகை மதிப்பீட்டாளர் போன்ற உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும்.இந்த குழுக்கள் ஆய்வு பணியை, நவம்பர் 15க்குள் முடித்து, சரக துணை பதிவாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அடுத்தடுத்த நிலைகளில் அறிக்கை சமர்பிக்கப்பட்டு, இறுதி அறிக்கை நவம்பர், 20க்குள் மண்டல இணை பதிவாளர்கள் வாயிலாக, பதிவாளருக்கு அனுப்பப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த ஆய்வுக்கு பின் அதிரடி நடவடிக்கை இருக்கும் என்பதால், முறைகேடாக கடன் பெற்றோர், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், சங்கத்தில் பொறுப்பில் இருந்த அரசியல்வாதிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க
விவசாயிகளுக்கு மின் இணைப்பு திட்டம் - முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
சம்பா பருவ பயிர்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு தமிழக அரசு வலியுறுத்தல்!
Share your comments