கோவில்பட்டி அருகே இடைசெவலில் உள்ள மானாவாரி நிலத்துக்கு சென்ற ஆட்சியர் செந்தில்ராஜிடம், மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிர்களை விவசாயிகள் காண்பித்தனர். மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடும் (Compensation), காப்பீடும் (insurance) பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் உறுதியளித்தார்.
2-ம் முறையாக விதைப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1.74 லட்சம் ஹெக்டேர் மானாவாரி நிலங்கள் உள்ளன. நடப்பாண்டு ராபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், சின்ன வெங்காயம், மிளகாய், சூரியகாந்தி, பருத்தி, எள், குதிரைவாலி, சிவப்பு சோளம், சீனி அவரை, கொத்தமல்லி போன்ற பல்வேறு பயிர்கள் விவசாயிகள் பயிரிட்டனர். ஆனால், வடகிழக்கு பருவமழை (Northeast monsoon) ஐப்பசி 15-ம் தேதி பின்னர் காலதாமதமாக தொடங்கியதால் ஆவணியில் விதைக்கப்பட்ட பயிர்கள் இருசீராக முளைத்தன. இதில், முற்றிலுமாக முளைப்பு தன்மை இல்லாமல் போன நிலங்களை இருந்த பயிர்களை விவசாயிகள் அழித்து மீண்டும 2-ம் முறையாக விதைப்பு செய்தனர்.
பருவநிலை மாற்றம்
இந்த பயிர்களில் சின்ன வெங்காயம், உளுந்து, பாசி ஆகியவை மார்கழி மாதம் 10-ம் தேதியையொட்டி அறுவடைக்கு (Harvest) வந்துவிடும். ஆனால், விடாது பெய்த மழை காரணமாக உளுந்து, பாசி பயிர்களில் முதிர்ந்த காய்களின் நெத்துகள் வழியே ஈரப்பதம் ஏற்பட்டதால் முளைத்துவிட்டன. பொன் நிறத்தில் காணப்பட வேண்டிய வெள்ளைச்சோளம் கருமை நிறத்துக்கு மாறிவிட்டது. பருவநிலை மாற்றத்தால் இந்த பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் பரவி உள்ளது. கடந்த ஆண்டுகளை போல், தற்போதும் மக்காச்சோளம் (Maize) பயிரில் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டது. சின்ன வெங்காயம், ஈரப்பதம் காரணமாக நிலத்திலேயே அழுகி துர்நாற்றம் வீசி தொடங்கியது.
அதிக ஈரப்பதம்
கடைசியாக பயிரிடப்பட்ட கொத்தமல்லி செடிகள் அதிக ஈரப்பதத்தால் (High Moisture) குறைந்த இலைகளுடன் அழுகிவிட்டது. மிளகாய் செடிகள் முளைக்காமல் போகின. ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வங்கிகளிலும், தனியாரிடமும் வாங்கி செலவு செய்த விவசாயிகள், அரசு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
விவசாயிகள் கோரிக்கை
இதையடுத்து, இன்று எட்டயபுரம் அருகே படர்ந்தபுளி, கழுகாசலபுரம், கமலாபுரம், முத்துசாமிபுரம், விளாத்திகுளம் அருகே சிவலார்பட்டி, கோவில்பட்டி அருகே இடைசெவல் ஆகிய கிராமங்களுக்கு சென்று, மழையால் சேதமடைந்த மானாவாரி பயிர்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் (k. sendhilraj) ஆய்வு செய்தார். அவரிடம் கிராம மக்கள் தொடர் மழையால் சேதமடைந்த பயிர்களை காண்பித்து நிவாரணம் வழங்க வலியுறுத்தினர். மேலும், தங்களது விவசாய காடுகளுக்கு செல்ல உரிய பாதை இல்லை. எனவே, சாலை அமைத்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்ட மானாவாரி நிலங்களுக்கு சென்ற ஆட்சியர், பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இழப்பீடு மற்றும் காப்பீடு
தூத்துக்குடி மாவட்ட வடக்கு பகுதியில் உள்ள கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டங்கள், புதூர் வட்டாரம் பகுதியில் ஏராளமான மானாவாரி விவசாயிகள் உள்ளனர். இவர்கள் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விதைத்து, டிசம்பர் மாத இறுதியில் அறுவடையில் ஈடுபடுவார்கள். இந்தாண்டு அறுவடை செய்யும் நேரத்தில் அதிகமாக மழை பெய்ததால் ஏராளமாக சேதமடைந்ததுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஹெக்டேர் மானாவாரி பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இதில் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேர் உளுந்து தான் பயிரிடுகின்றனர். 40 ஆயிரம் ஹெக்டேர் மக்காச்சோளம், 20 ஹெக்டேர் பாசி பயறு, மீதமுள்ள நிலங்கள் மற்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. பயிர் சேதம் (Crop damage) குறித்து வருவாய்த்துறை, வேளாண்மை துறை, புள்ளியியல் துறை ஆகியவை இணைந்து கணக்கெடுத்து வருகிறது. இதுதொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, தகுந்த இழப்பீடு மற்றும் காப்பீடு தொகை பெற்றுத்தரப்படும் என்று ஆட்சியர் கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விளைபொருட்களுக்கு விலை கிடைக்காமல் திணறும் விவசாயிகளுக்கு, வேளாண் துறையின் ஆலோசனை!
நெல் ஈரப்பதத்தை உலர்த்த நவீன இயந்திரம் வருகை! டெல்டா விவசாயிகளின் புது முயற்சி!
Share your comments