இந்தியா முழுவதும் அடுத்த 20 நாட்களுக்குப் பண்டிகை காலம் என்பதால் மக்களின் சுமையைக் குறைக்கும் விதமாக மத்திய அரசு சமையல் எண்ணெய் (Cooking Oil) மீது விதித்து இருந்த அதிகப்படியான இறக்குமதி வரியை கணிசமாகக் குறைக்க முடிவு செய்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு என அனைத்தும் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள வேளையில் சாமானிய மக்கள் பண்டிகையைக் கொண்டாடுவதற்குக் கூட யோசிக்கும் நிலையில் விலைவாசி உயர்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் பண்டிகை காலத்திற்கு ஏற்ப இக்காலகட்டத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
இறக்குமதி வரிக் குறைப்பு
மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத பாமாயில், சோயாபீன் ஆயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றின் மீது இருந்த இறக்குமதி வரியை 16.5 முதல் 19.25 சதவீத அளவில் குறைத்துள்ளது.
இந்தக் குறைக்கப்பட்ட வரி அளவீடுகள் அக்டோபர் 14 முதல் மார்ச் 31 வரையில் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் செப்டம்பர் மாதமே இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவு 25 வருட உச்சத்தைச் செப்டம்பர் மாதம் அடைந்துள்ளது. இந்த உயர்வுக்கு இந்தியாவில் பண்டிகை காலம் மூலம் ஏற்பட்ட அதிகப்படியான டிமாண்ட் தான்.
விலை குறைப்பு
தற்போது மத்திய அரசு அறிவித்துள்ளது விலை குறைப்பு மூலம் சுத்திகரிக்கப்படாத பாமாயில் ஒரு டன்னுக்குச் சுமார் 14,000 ரூபாய் வரையில் குறையும், இதேபோல் சுத்திகரிக்கப்படாத சோயாபீன் ஆயில் மற்றும் சூரியகாந்தி விதை எண்ணெய் (Sun flower Seed oil) விலை 20,000 ரூபாய் வரையில் குறையும்.
ரீடைல் சந்தை
இதன் மூலம் ரீடைல் சந்தையில் ஒரு கிலோ எண்ணெய்க்கு 6 முதல் 8 ரூபாய் வரையில் குறையும், இது பண்டிகை காலத்தில் சாமானிய மக்களுக்குப் பெரும் நன்மையை அளிக்கும் என்றால் மிகையில்லை. ஆனால் தற்போது இதற்குப் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.
மலேசியா
இந்தியாவில் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி குறைக்கப்பட்ட செய்தி வெளியான அடுத்த நொடியே மலேசியாவில் ஏற்றுமதி செய்யப்படும் எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரீடைல் சந்தையில் விலை குறையாது என SEA நிறுவனத்தின் தலைவர் பிவி மேத்தா தெரிவித்துள்ளார்.
மாற்றமில்லை
இதன் மூலம் இந்தியாவில் அடுத்த 4 முதல் 6 மாதத்திற்குச் சமையல் எண்ணெய் விலையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது, அப்படி இருந்தாலும் மிகவும் குறைவான அளவில் தான் இருக்கும் என பிவி மேத்தா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
பசுமைப் பட்டாசுகளை அனுமதியுங்கள்: 4 மாநில முதல்வர்களுக்கு மு.க ஸ்டாலின் வேண்டுகோள்!
குட்டைகள் சீரமைப்பு பணி: நிலத்தடி நீர் மட்டம் உயரும் என மக்கள் மகிழ்ச்சி!
Share your comments