1. செய்திகள்

கொரோனா நிவாரணத் தொகை ரூ.2000 மற்றும் 14 பொருட்கள் ஓரே நாளில் வழங்கப்படும்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாம் தவணையான 2,000 மற்றும் 14 மளிகைப் பொருட்களும் ஒரே நாளில் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்

ரூ.4000 நிவாரண தொகை

இது தொடர்பாக, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்கும் வகையில், வாழ்வாதாரம் பாதிப்படைந்த மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கிட, பொது விநியோகத் திட்டத்தில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 4,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்க ஆணையிட்டு, அதில் முதல் தவணையாக 2,000 ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் தவணையாக 2,000 ரூபாய் வழங்கவும், 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பினை பொது விநியோகத் திட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும், முதல்வர் ஆணையிட்டு, கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று இத்திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.

இதுமட்டுமன்றி, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்துப் பொருட்களையும் கொள்முதல் செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென்பதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் செய்யும் நெறிமுறைகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன. இதனால், முதல் மாதக் கொள்முதலிலேயே அரசுக்கு 80 கோடி ரூபாய் வரையில் சேமிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான வழக்குகளின் காரணமாக, பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களின் வழக்கமான விநியோகம் ஒரு வார காலம் தாமதமாகத் தொடங்கிட நேரிட்டு, ஜூன் 10 ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

ஜூன் 15 முதல் 2- வது தவணை

எனவே, 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்கள் 11-6-2021 முதல் 14-6-2021 வரை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். இந்த டோக்கன்களின் அடிப்படையில், 2,000 ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை 15-6-2021 முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் காலை 8-00 மணி முதல் நண்பகல் 12-00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

குடும்ப அட்டைதாரர்கள் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினையும், கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாம் தவணையான 2,000 ரூபாயினையும், ஒரே நேரத்தில் பெற்றுச் செல்லும் வகையில், மளிகைப் பொருள் தொகுப்பு மற்றும் நிவாரணத் தொகை ஒன்றாகவே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
முன்னர் வழங்கப்பட்ட நலத் திட்ட உதவிகள் பெறும்போது எழுந்த தனி மனித இடைவெளி சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, 75 முதல் 200 வரையிலான பயனாளிகளுக்குக் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மற்றும் உள்ளூர் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகம் குறைகளுக்கு இடமளிக்காமல், இவ்விரு நலத் திட்ட உதவிகளை உரிய முன்னறிவிப்புடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000

அனைத்து அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் எவ்வித விடுபடுதலுமின்றி, இரண்டாம் தவணைத் தொகை 2,000 ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கப்படும் என்பதால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில், தொடர்புடைய நியாய விலைக் கடையிலிருந்து எவ்வித சிரமமுமின்றி பெற்றுச் செல்லலாம்.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால், குறித்த நாள் மற்றும் நேரத்தில் பெற இயலாதவர்கள், வருகின்ற மாதத்தில் அவர்களுக்கான மளிகைப் பொருட்கள் தொகுப்பு மற்றும் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், கொரோனா நோய்ப் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்தும், அதாவது, தனி நபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதுடன், சமூகத்திற்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் செயல்பட்டு, இரண்டாம் தவணைத் தொகையான 2,000 ரூபாயையும், 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும் பெற்றுச் செல்ல அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".

இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

English Summary: Corona relief amount of Rs.2000 and 14 items will be provided in one day

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.