நாடு முழுவதும் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான கோவிட் கட்டுப்பாடுகளும் மார்ச் 31க்குள் முடிவுக்கு வருவதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கோவிட் பரவல் துவங்கியதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் இறுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கோவிட் பாதிப்புகள் படிப்படியாக குறைவதும், பிறகு 2வது, 3வது அலைகள் வருவதுமாக இருந்தது. இதனால், கோவிட் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.
கோவிட் கட்டுப்பாடுகள் (Covid Restrictions)
தற்போது கோவிட் பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. நாட்டு மக்களில் பெரும்பாலானோர் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை அடுத்து தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து விதமான கோவிட் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா எழுதியிருக்கும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் பயனாக, நாடு முழுவதும் கோவிட் பாதிப்பு விகிதம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, இதுவரை பின்பற்றப்பட்டு வந்த கட்டுப்பாடுகளையும் இனியும் தொடர வேண்டிய அவசியமில்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவெடுத்துள்ளது.
கோவிட் கட்டுப்பாடுகள் தொடர்பாக, கடந்த பிப்ரவரி 25ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, அந்த கால அவகாசம் நிறைவடைந்த பிறகு, கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படாது. ஆனால், கட்டுப்பாடுகள் தேவையில்லை என்றாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது போன்றவற்றை சமூக பொறுப்புடன் பின்பற்ற வேண்டும்.
மேலும், நாட்டில் கோவிட் கட்டுப்பாடுகள் வரும் 31ம் தேதிக்குள் முடிவுக்கு கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு வருகிறது.
மேலும் படிக்க
இந்திய தடுப்பூசி இயக்கம் மக்களால் நடத்தப்படுகிறது: பிரதமர் பெருமிதம்!
சீனாவைத் தொடர்ந்து ஜெர்மனியிலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!
Share your comments