தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று, 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தமிழகத்தில், அரசின் தொடர் நடவடிக்கைகளால், கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்தது; அதனால், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப் பட்டன.
எச்சரிக்கை
சென்னை, செங்கல்பட்டு, கோவை உட்பட, 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், கொரோனா தொற்று கணிசமாக உயர்ந்து வருகிறது. சென்னையில் இரண்டு தினங்களுக்கு முன், 120 ஆக இருந்த தொற்று பாதிப்பு,180 வரை உயர்ந்து உள்ளது. இதேநிலை தொடர்ந்தால், கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை (Third Wave) தவிர்க்க முடியாது என்று, தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலையை மக்கள் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்தி இருக்கிறோம்.
வெளிநாடுகளிலும், கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலும், மூன்றாம் அலை தொற்று அதிகரித்து வருகிறது.கொரோனா தொற்று முற்றிலும் அழியவில்லை என்பதையே அது காட்டுகிறது. இதை ஒரு எச்சரிக்கை மணியாக, மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளி
பணியாற்றும் இடங்கள், கூட்டம் அதிகம் உள்ள இடங்கள், குடும்ப நிகழ்ச்சிகள் போன்ற இடங்களில், மக்கள் சற்று அலட்சியமாக இருப்பதால், 20 மாவட்டங்களில், சிறு சிறு பகுதிகள் அளவில் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா உருமாறுவதை நம்மால் தடுக்க முடியாது. அனைவரும் தடுப்பூசி (Vaccine) போட்டுக் கொள்வதன் வாயிலாகவும், முக கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிப்பதன் வாயிலாகவும், தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
மேலும் படிக்க
வீடுகளில் சூரிய மின்சக்தி அமைக்க மானியம் அறிவிப்பு: மத்திய அமைச்சர் தகவல்
கொரோனா உயிரிழப்பு 21% அதிகரிப்பு: தடுப்பூசி ஒன்றே தீர்வு என WHO அறிவிப்பு!
Share your comments