ஆஸ்திரேலியாவில் விளைந்த புளுபெர்ரி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சராசரியாக விளையும் புளுபெர்ரியின் எடையை விட பன்மடங்கு அதிகமாக உள்ள புளுபெர்ரி ஆஸ்திரேலியா விவசாயிகளின் பண்ணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதுக்குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு-
அவுரிநெல்லி என்றழைக்கப்படும் புளுபெர்ரி வணிக ரீதியில் மேற்கத்திய நாடுகளில் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. பிங்-பாங் பந்தைப் போன்று இருக்கும் இந்த பழங்கள் பொதுவாக நவம்பரில் கொடிகளில் இருந்து பறிக்கப்பட்டு, அன்றிலிருந்து குளிர்சாதன பெட்டியில் பாதுகாக்கப்பட்டு விற்கப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள கோஸ்டா குழுமத்தால் பயிரிடப்பட்ட புளுபெர்ரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், அதனின் எடைதான்.
புளுபெர்ரி எவ்வளவு எடை?
மேற்கு ஆஸ்திரேலியாவில் பயிரிடப்பட்ட 16.3 கிராம் எடையுள்ள புளுபெர்ரி தான் உலகிலேயே அதிக எடைக்கொண்ட மிகப்பெரிய புளுபெர்ரி என்ற சாதனையினை தன்வசம் வைத்திருந்தது. இதனிடையே, தற்போது 20.4 கிராம் (0.71 அவுன்ஸ்) எடையுடைய புளுபெர்ரி கோஸ்டா குழுமத்தால் பயிரிடப்பட்டுள்ளது. சராசரி காட்டு புளுபெர்ரியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகம் எனலாம். கோஸ்டா குழுமத்தின் தோட்டக்கலை நிபுணர்களான பிராட் ஹாக்கிங், ஜெசிகா ஸ்கால்சோ மற்றும் மேரி-பிரான்ஸ் கோர்டோயிஸ் ஆகியோரால் நியூ சவுத் வேல்ஸின் கொரிண்டியில் உள்ள கோஸ்டாவின் பெர்ரி பண்ணையில் இந்த புளுபெர்ரி வளர்க்கப்பட்டுள்ளது.
சாதனை படைத்த புளுபெர்ரி வளர 12 மாதங்கள் ஆனது. இது "எடர்னா" வகையைச் சேர்ந்தது, இது கோஸ்டாவின் வெரைட்டி மேம்பாடு திட்டத்தின் சமீபத்திய வெளியீடுகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுக்குறித்து தோட்டக்கலை நிபுணரான பிராட் தெரிவிக்கையில், “அறுவடைக்கு சில நாட்களுக்கு முன்பு வரை பழத்தின் அளவினை உன்னிப்பாக கவனித்து வந்தோம். அறுவடைக்கு தேர்ந்தெடுக்கும் போதே இந்த புளுபெர்ரி "மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று" என்பதை உணர்ந்தோம்” எனத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "எடர்னா வகை மிகவும் சிறந்த சுவையினை கொண்டதோடு, தொடர்ந்து பெரிய பழமாகவும் வளரும் தன்மையுடையது. பழம் பெரியதாக இருந்தாலும், பிரீமியம் வகை புளுபெர்ரியை உருவாக்கும் போது எதிர்பார்க்கப்படும் தரம் மற்றும் சுவையில் எந்த குறைவும் இல்லை” என்றார்.
வேளாண் நடைமுறையில் மாற்றம்:
வளர்ந்து வரும் உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, வெப்பமான காலநிலைக்கு ஏற்றவாறும், பூச்சிகள் மற்றும் நோய்களின் தாக்குதலுக்கு எதிராகவும் புதிய வகைகளை உருவாக்க வேண்டிய நெருக்கடி தற்போது உள்ளது.
கோஸ்டா பண்ணையின் குழுமம், புளுபெர்ரி தவிர்த்து திராட்சை, தக்காளி, காளான் போன்றவற்றையும் வளர்த்து வருகிறது. விவசாய நடைமுறைகளில் அதன் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்ற கோஸ்டா குழுமம், கோஸ்டாவின் வெரைட்டி இம்ப்ரூவ்மென்ட் திட்டத்தின் (VIP) கீழ் Eterna எனப்படும் புதிய வகை அவுரிநெல்லிகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more:
கொப்பரை மற்றும் பயறு கொள்முதலுக்கான தேதி மாவட்டம் வாரியாக அறிவிப்பு!
தமிழ்நாட்டில் புதியதாக 4 மாநகராட்சி- எல்லை எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது?
Share your comments