செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 2022-ஆம் ஆண்டுக்கான பருத்தி மறைமுக ஏலம் இன்று தொடங்கியது. டெல்டா மாவட்டங்களில் முதல்முறையாக தேசிய வேளாண் மின்னணு சந்தைத் திட்டத்தின் (இ-நாம்) மூலம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் குவிண்டால் அதிகபட்சமாக ரூ.11269க்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பருத்தி சாகுபடி (Cotton Cultivation)
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 4961 ஹெக்டேரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். மாவட்டத்தில் முன்கூட்டியே பருத்தி சாகுபடி செய்திருந்த விவசாயிகளின் பருத்திகள் வெடித்து விற்பனைக்கு தயாரானதால், முன்கூட்டியே விற்பனைக் கூடங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளன.
பருத்தி மறைமுக ஏலம் (Cotton Indirect Auction)
முதற்கட்டமாக நாகை விற்பனை குழுவுக்கு உட்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களிலேயே முதல்முறையாக தேசிய வேளாண் மின்னணு சந்தைத் திட்டத்தின்கீழ் (இ-நாம்) இந்த மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. நாகை விற்பனைக்குழுச் செயலாளர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சை, நாகப்பட்டினம், தேனி, சேலம், விழுப்புரம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இருந்து மில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்று, சுமார் 250 குவிண்டால் பருத்தியை அதிகபட்சமாக ரூ.11,269க்கும், குறைந்தபட்சமாக ரூ.9865க்கும் ஏலம் எடுத்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தி அதிகபட்சமாக ரூ.9186க்கு மட்டுமே ஏலமா போன நிலையில், நிகழாண்டு முதல் மறைமுக ஏலத்திலேயே கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க
Share your comments