பருத்தி விலை குறைவதை தொடர்ந்து, நுால் விலையும் குறைந்துள்ளது; மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை குறைந்துள்ளதால் தான் பருத்தி விலை குறைந்துள்ளது. பருத்தி இறக்குமதி தொடங்கும்போது, மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என, தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம் தெரிவித்தார்.
பருத்தி விலை (Cotton price)
கோவையில் சைமா தலைவர் ரவிசாம், துணைத்தலைவர் சுந்தர்ராமன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை குறைத்ததை தொடர்ந்து, உள்நாட்டிலும் பருத்தியின் விலை குறையத் தொடங்கியுள்ளது. கண்டி (355 கிலோ) 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது. நுால் விலையும் கிலோ ஒன்றுக்கு, 22 முதல் 30 ரூபாய் வரை நுாலின் ரகத்தை பொறுத்து குறைந்துள்ளது.
பருத்தி இறக்குமதி அதிகரிக்கும்போது, மேலும் இது குறைய வாய்ப்பு உள்ளது. விலை குறைந்தபோதிலும், நுால் நுகர்வும் 30 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. தேவையான அளவிற்கு மில்களில் நுால் கையிருப்பு உள்ளதுடன், தேக்க நிலையும் ஏற்பட்டுள்ளது. பருத்தியை பொறுத்தவரை, விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலையாக கண்டி ஒன்றுக்கு, 45 ஆயிரம் ரூபாயாக அரசு நிர்ணயித்துள்ளது.
பருத்தியின் விலை ரூ.91 ஆயிரமாக இருப்பதால், விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பருத்தி விலை அதிகரித்ததால், தமிழ்நாட்டிலும் பருத்தி பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, இது 7 முதல் 8 லட்சம் பேல்கள் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கிறோம். கோவையில் வரும் 24 முதல் 27 வரை, 'டெக்ஸ்பேர்ஸ் 2022' சர்வதேச ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சி நடக்கிறது. இதில் புதிய கண்டுபிடிப்புகளாக, 50க்கும் மேற்பட்ட இயந்திரங்கள் அறிமுகமாகின்றன. உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் இயந்திரங்கள், உதிரிபாகங்கள் காட்சியில் இடம் பெறுகின்றன.
ஜவுளித் தொழில் (Textile Business)
ஜவுளித்தொழிலில் கடந்த 2 ஆண்டுகளில், 6,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் ஆண்டுகளில் எப்.டி.ஏ., எனப்படும், வரியில்லா வணிக ஒப்பந்தம் இங்கிலாந்து மற்றும் கனடாவுடன் ஏற்பட்டால், ஜவுளித்துறையில் முதலீடுகள் அதிகரிக்கும். இதன் அளவு ரூ.50 ஆயிரம் கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஜவுளித்தொழில் வளர்ச்சி நன்றாக இருப்பதால், இயந்திரங்களுக்கு தேவையும் அதிகரித்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க
வெப்பத்தை குறைக்க பசுமை இல்லம் அமைத்த வங்கிப் பணியாளர்!
குவைத்துக்கு மாட்டுச் சாணம் ஏற்றுமதி: இயற்கை விவசாயத்திற்கு வழிவகை!
Share your comments