கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குமராட்சி, புவனகிரி, டெல்டா வட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் காவிரி பாசனம் (Cauvery Irrigation) பெறுகிறது. டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த ஆண்டு குறித்த காலத்தில் தண்ணீர் திறந்ததால், ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரையில் குறுவை, அக்டோபரில் துவங்கி ஜனவரி வரையிலான காலத்தில் சம்பா ஆகிய இரு போக சாகுபடி (Cultivation) செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி
உரிய காலத்தில் திறக்கப்படும் தண்ணீரில், இம்மாத இறுதிக்குள் கீழணை மற்றும் வீராணம் ஏரிக்கு வந்து விடும். குறித்த காலத்தில் தண்ணீர் கிடைப்பதால் குறுவை சாகுபடியை கடலுார் மாவட்ட டெல்டா பாசன விவசாயிகள் துவக்கியுள்ளனர். காவிரி தண்ணீர் விவசாயிகளுக்கு தடையின்றி கடைமடை வரையில் சென்று சேர வசதியாக, மாவட்ட டெல்டா பகுதியில் ரூ. 2.20 கோடி மதிப்பில் 55 கால்வாய்கள் துார்வாரி கரைகள் பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. குறுவை சாகுபடிக்காக தமிழக அரசு பல்வேறு சிறப்புதொகுப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பகுதி டெல்டா பாசனத்தில் குறுவை சாகுபடி (Kuruvai Cultivation) செய்யப்படுகிறது. குறுவை சாகுபடிக்கான நெல், உரங்கள் இருப்பு உள்ள நிலையில் விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக பயிர்க்கடன் வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது
பயிர்க்கடன்
இது குறித்து, மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண் இயக்குநர் இளஞ்செல்வி கூறுகையில், மாவட்டத்தில், 167 கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக குறுவை சாகுபடிக்கு கடன் வழங்கப்படுகிறது. கடந்த பருவத்தில் ரூ.550 கோடி இலக்கு நிர்ணயித்து கடன் வழங்கப்பட்டது. தற்போதும் அதே அளவிற்கு கடன் வழங்க திட்டமிட்டுள்ளோம். ஜூன் வரையில் 4,279 பேருக்கு ரூ.34.57 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், புதியதாக சங்க உறுப்பினர்களான 152 பேருக்கு ரூ.91 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது.
7 சதவீதம் வட்டியாக நிர்ணயித்தாலும் உரிய காலத்தில் கடன் தொகையை திரும்ப செலுத்தியவர்களிடம் வட்டி வசூலிக்கப்படுவதில்லை. இது அனைத்து வகையான விவசாயக் கடன்களுக்கும் (Agri Loans) பொருந்தும். அனைத்து கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையும் நடந்து வருகிறது. எனவே, விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்ந்து பயன்பெறலாம். கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கும் எந்த நிபந்தனையும் இல்லாமல் கடன் வழங்கி வருகிறோம், என்றார்.
மேலும் படிக்க
குறுவை சாகுபடிக்கு விதை விதைத்து விட்டு மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்
கூட்டுறவுத் துறைக்கு தனி அமைச்சகத்தை உருவாக்கியது மத்திய அரசு
Share your comments