கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தை திறந்து வைத்தார். இதன் பின் செய்தியாளரை சந்தித்து பேசினார்.
விவசாய கடன் (Agriculture Loan)
அப்போது அவர், “திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை மத்திய கூட்டுறவு வங்கியின் தானியங்கி பணவழங்கும் இயந்திரம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து வங்கி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க முடியும். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 66 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பு தொகையாக உள்ளது. இதன் மூலம் 17 வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 40 ஆயிரம் கோடிக்கு விவசாய கடன் வழங்கப்பட்டு 14.84 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
தற்போது மேட்டூர் அணையானது முன்னதாக திறந்து வைக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. தற்போது 2.7 லட்சம் விவசாயிகளுக்கு டெல்டா மாவட்டத்தில் மட்டும் 1496 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலில் சம்பந்தப்பட்ட 419 பேர் கைது செய்யப்பட்டு, உணவு கடத்தல் குறித்து தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் உணவுப் பொருள் துறை சார்பில் 22 பொருட்களின் விலை சந்தைகளில் விற்கும் விலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.
இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு நுகர்வோர்கள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் திரு எஸ்.பிரபாகரன், நுகர்வோர் பணிகள் கூடுதல் இயக்குனர் சங்கர், திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் படிக்க
கடைமடைக்கு காவிரி நீர் வந்து சேரவில்லை: விவசாயிகள் கவலை!
கால்நடைகளைத் தாக்கும் குடற்புழுக்கள்: மூலிகை வைத்தியத்தில் தீர்வு!
Share your comments