கோவை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை என, ஏழு வனச்சரகங்கள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் இருந்து இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வெளியேறும் காட்டுயானைகள், மலையோர கிராமங்களுக்குள் புகுந்து, தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்துகின்றன.
காட்டு யானைகளின் வரவை தடுக்க, வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறையினர் போதுமான அளவில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், யானைகளின் வரவை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், பயிர் சேதமும், உயிர் சேதமும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
வனப்பகுதி (Forest Area)
கோவை வனக் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, ஏழு வனச்சரகங்களில், கடந்த 25 நாட்களில், ஒற்றை யானை 117 முறை, ஆண் யானைகள் குழுவாக 67 முறை, பெண் யானைகள் குழுவாக 81 முறை, பெண் யானை குட்டியுடன் மூன்று முறை என மொத்தம், 268 முறை வனப்பகுதியில் இருந்து, ஊருக்குள் புகுந்துள்ளன.
வனத்துறை எச்சரிக்கை (Forest Department Warning)
வன அலுவலர்கள் கூறியதாவது: காரமடை வனச்சரகம் மேல்பாவி; சிறுமுகை வன சரகத்திற்கு உட்பட்ட கருப்பராயன் கோவில்; மேட்டுப்பாளையம் வனச்சரகம் முந்திரி முடக்கு; பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்துக்கு உட்பட்ட திருமாலுார் அட்டி மாரியம்மன் கோவில் பகுதி மக்கள், அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்த்து, மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
இரவு நேரங்களில் இப்பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியே உறங்குவதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும்போது கைவிளக்குகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும். காட்டு யானைகளின் வழித்தடங்களில், நடமாடுவதை தவிர்த்தல் வேண்டும். யானைகளின் நடமாட்டம் இருப்பது தெரியவந்தால், அருகில் உள்ள வனத்துறையினருக்கு பொதுமக்கள் தெரிவித்தல் வேண்டும்.
தென்னந்தோப்பு சூறை
காரமடையை அடுத்த தோலம்பாளையத்தில், யானைகள் கூட்டம் கூட்டமாக இரவில் வந்து, தென்னந்தோப்பில் புகுந்து, மரங்களை சேதம் செய்து வருகின்றன. இதுவரை , 150க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்துள்ளன. அவற்றின் குருந்துக்களை பிடுங்கி நின்றுள்ளன. மேலும், தென்னை தோப்புக்கு தண்ணீர் கொண்டு செல்லும், குழாய்களை சேதப்படுத்தி உள்ளன. அருகே உள்ள வாழை தோட்டத்தில் புகுந்து, வாழை மரங்களையும் சேதம் செய்துள்ளன.
விவசாயி மாணிக்கராஜ் கூறுகையில், '' வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தால், சரியானே நறத்திற்கு, அவர்கள் வருவதில்லை. பாதி விவசாயபயிர்ளை, யானைகள் சேதம் செய்கின்றன. யானைகளால் சேதமடைந்த தென்னைக்கும் வாழைக்கும் உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். யானைகள் விவசாய நிலங்களுக்கு வருவதை வனத்துறையினர் தடுக்க வேண்டும்,'' என்றார்.
மேலும் படிக்க
Share your comments