வடிகால் வசதி ஏற்படுத்தும் பணியில் பொதுப்பணித் துறையினர் அலட்சியம் காட்டியதே, டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிர்கள் (Samba Crops) மழை நீரில் மிதக்க முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் மேட்டூர் அணை பாசனத்தையும், வடகிழக்கு பருவ மழையையும் நம்பி, 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை, 10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடக்கிறது.
அக்டோபர் 26ம் தேதி முதல் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையால், டெல்டா மாவட்டங்களில், நேரடி விதைப்பு மற்றும் இயந்திர நடவு மூலம் மேற்கொள்ளப்பட்ட சம்பா பயிர்கள், 1.50 லட்சம் ஏக்கரில் பாதிக்கப்பட்டன.
வடிகால் வசதி (drainage facilities)
டெல்டா மாவட்டங்களில் கிளை ஆறுகள், கால்வாய், வாய்க்கால்கள், குடிமராமத்து பணிகளில், சில ஆண்டுகளாக தூர் வாரப்பட்டன. ஆயினும், வடிகால் வசதிக்கான கட்டமைப்புகளை பொதுப்பணி துறையினர் முறையாக பராமரிக்காமல் விட்டு விட்டதால், சம்பா பயிர்கள், தண்ணீரில் மூழ்க காரணமாக அமைந்து விட்டது.
இது குறித்து, விவசாயிகள் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் பொதுவாகவே பல இடங்களில் வாய்க்கால்கள் முறையாக துார்வாராமல் இருப்பதால், மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கு முறையாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக உள்ளது.
இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் குடிமராமத்து திட்டம் துவங்கப்பட்டு வாய்க்கால்கள், ஆறுகள் துார் வாரும் பணிகள் தற்போது வரை நடந்து வருகிறது. ஆனால், இதுநாள் வரை முறையாக பணிகள் நடக்கவில்லை.
கட்டமைப்பு வசதிகள்
இதுமட்டுமின்றி மழையால் தேங்கும் வெள்ளநீர் வடிய தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை. கால்வாய்கள், வாய்க்கால்களை சீரமைத்து, வடிகால் வசதியை ஏற்படுத்தி, டெல்டா மாவட்ட பாசன கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளையும் துவங்க வேண்டும். தற்போதைய மழை பாதிப்புக்கு பின், அவசர கதியில் சில இடங்களில் வடிகால்கள் துார்வாரப்படுகின்றன.டெல்டா மாவட்டங்களில் வடிகால் பகுதிகள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு, கட்டடம் போன்றவையால் மூடப்பட்டுள்ளன.
பழைய வடிகால் வரைபடத்தை கொண்டு, தற்போது அந்த வடிகால் தடங்களை கணக்கு எடுத்து, மாற்று வடிகால் வசதியை ஏற்படுத்த, அரசு இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் படிக்க
வெள்ளத்தால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20000 நிவாரணம்!
தமிழகத்தில் நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 19% ஆக உயர்த்த மத்திய அமைச்சர் ஒப்புதல்!
Share your comments