மோக்கா புயலானது வங்கதேசம் மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள்.
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது:
வட தமிழக கடலோரப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (08.05.2023) காலை உருவாகியுள்ளது. இது 9-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 10 -ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மேலும் வலுபெறக்கூடும்.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 11-ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும். அதன் பிறகு வடக்கு-வட கிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மியன்மார் கடற்கரை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 5 தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு விவரம் பின்வருமாறு-
08.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தென்காசி,விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
09.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.05.2023 முதல் 12.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
08.05.2023: குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
09.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
10.05.2023 மற்றும் 11.05.2023: தென்கிழக்கு மற்றும் அதனை ஓட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
12.05.2023: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் 08.05.2023 தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவுறுத்த படுகிறார்கள்,
மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
pic courtesy: TWC Met Team
மேலும் காண்க:
TNSTC விரைவு பேருந்துகளில் பெண்களுக்கென புதிய வசதி அறிமுகம்!
Share your comments