1. செய்திகள்

டவ்-தே புயல் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

அரபிக் கடலில் உருவாகியுள்ள 'டவ்-தே' புயல் (Cyclone Tauktae) சின்னம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தினார்

அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ்-தே புயல் சின்னம் காரணமாகத் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல் மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலில் சூறாவளி 90 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், புயல் சின்னம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் கலந்துகொண்டு, புயல் சின்னம் குறித்த தற்போதைய நிலவரத்தையும், மழை பெய்யவிருக்கிற சாத்தியக் கூறுகளையும் எடுத்துக் கூறினார். 

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை ஏற்படக்கூடிய மாவட்டங்களில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

மேலும், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் 14-5-2021 காலைக்குள் கரைக்கு திரும்புமாறு ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு முதல்-அமைச்சர், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள 244 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுள், 162 மீன்பிடிப் படகுகள் தற்போது கரைக்குத் திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய படகுகளும் கரை திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

மலை மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நிலச்சரிவு ஏற்படக்கூடிய மலை மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களைத் தயார் நிலையில் வைக்கவும் உரிய அறிவுரைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

மழையால் பாதிக்கப்படுகிறவர்களை முகாம்களில் தங்க வைக்கும்போது, கொரோனா எச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறும், முழு வீச்சில் வருவாய்த் துறையினர் கண்காணிப்புப் பணிகளைச் செய்யுமாறும், அணைகளின் நீர்மட்டங்களைக் கண்காணித்து வரும்படியும் முதல்-அமைச்சர் கோரினார்.

உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உத்தரவு

தேசிய பேரிடர் மீட்புப் படையின் நான்கு குழுக்களும் மதுரை (2), கோயம்புத்தூர் (1) மற்றும் நீலகிரி (1) மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் அக்குழுக்களைக் கொண்டு உடனடியாக நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பொதுத் துறைச் செயலாளர் ஜகந்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ரெம்டெசிவர் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை : முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

அரசு தன்னால் இயன்றவரை கொரோனா தொற்றுக்கு எதிராக போராடிவருகிறது - பிரதமர் மோடி!!

கொரோனா நிவாரண நிதி- இப்போ இல்லேன்னா 18க்குப் பிறகு!

English Summary: Cyclone Tauktae to hit 4 districts in TN, Expects heavy rainfall for next 5 days CM advises on precautionary measures Published on: 15 May 2021, 07:25 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.