தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தற்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 33,361 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்ட சென்றது. கடந்த வாரத்தில் இதன் உச்சமாக நாள் ஒன்றுக்கு 36 ஆராயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். ஜூன் இறுதியில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 10ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலிலிருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது கொரோனா தொற்று படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், 33,361 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 474 பேர் உயிரிழந்து உள்ளனர். 30,063 பேர் குணமடைந்து உள்ளனர்.
கொரோனா பாதிப்பு விவரம்
தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 74,145 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 33,361 பேருக்கு கொரோனா உறுதியானது. இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,78,621 ஆக அதிகரித்து உள்ளது. 474 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,289 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னையில் 2,779 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் கோவையில் 4,734 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
20 கோடி டோஸ் தடுப்பூசி
நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து டோஸ்களின் எண்ணிக்கை 20.54 கோடியைக் கடந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. .
தடுப்பூசி வழங்கல் நடவடிக்கையின் மூன்றாவது கட்டம் தொடங்கியதிலிருந்து நாடு முழுவதும் உள்ள 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 1,51,52,040 பயனாளிகளுக்குத் தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
இதில், தமிழ்நாட்டில் மட்டும் 18 முதல் 44 வயது வரை உள்ள மக்களில், 6,42,267 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வசிக்கும் 18 முதல் 44 வயது வரை உள்ள மக்களில், 12,680 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க....
தமிழகத்தில் தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் சிக்னல்!
Share your comments