பெட்ரோல், டீசல் விலை தற்போது லிட்டருக்கு தலா 100 ரூபாயை எட்டியுள்ளதால், தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அவற்றின் விலைகளை குறைக்குமாறு, தமிழக அரசுக்கு வாகன உரிமையாளர்கள் கோரி வருகின்றனர்.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன. இதனால், எப்போதும் இல்லாத வகையில் அவற்றின் விலைகள் உயர்ந்துகொண்டே வருகின்றன. சட்டசபை தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அனைத்து தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்' என்று தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.
அக்கட்சி ஆட்சி அமைத்ததும், ஜூலையில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை எட்டி விறபனையில் இருந்தது. இதனால் சிரமப்பட்ட வாகன உரிமையாளர்கள், பெட்ரோல் விலையை குறைக்குமாறு, தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, ஆக 13ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது, பெட்ரோல் விலை மட்டுமின்றி டீசல் விலையும், 100 ரூபாயை தாண்டி தினமும் உயர்ந்த விலையில் விற்கப்படுகிறது.
பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால், அவற்றுக்காகவே வாகன உரிமையாளர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால், மற்ற செலவுகளும் அதிகரித்து, பலரும் சிரமப்படுகிறார்கள். எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டீசல் விலையை குறைக்குமாறு, வாகன உரிமையாளர்கள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாய் குறைக்கும்படியும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க:
Share your comments