ஆவின் நிறுவனம் தரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு பால் மற்றும் பால் உப பொருட்களை நுகர்வோர்களுக்கு நியாயமான விலையில் வழங்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மக்களின் உள்ளத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
ஆவின் நிறுவனம், பால் உப பொருட்களான பால்கோவா, மைசூர்பாக்கு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, ஐஸ்கிரீம், பன்னீர், தயிர், வெண்ணெய், நெய் போன்ற 235 வகையான பால் உப பொருட்களை மாநிலம் முழுவதுமுள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக உயரிய தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட நெய் பாதுஷா, நட்ஸ் ஹல்வா, நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, ஸ்டப்டு மோதிபாக், காஜு பிஸ்தா ரோல், காஜு கத்லி மற்றும் வகைப்படுத்தப்பட்ட சிறப்பு இனிப்பு வகைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த இனிப்புகள் அனைத்தும் அக்மார்க் தரம்பெற்ற ஆவின் நெய்யினால் சுகாதாரமான முறையில் எவ்வித வேதி பொருட்களும் சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்டு நவீன தொழில்நுட்ப முறையில் பேக் செய்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எனப்படும் டால்டாவை பயன்படுத்தி ஆவின் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதாக ஒரு நாளிதழில் 17 அக்டோபர் 2022 அன்று வெளியாகியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பான மற்றும் ஆவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான உள்நோக்கமுடைய அவதூறுகளை ஆவின் நிர்வாகம் சட்ட ரீதியாக எதிர்கொள்ளும்.
மேலும் ஆவினால் அமர்த்தப்படும் தனியார் பாலகங்களுக்கு, அவர்கள் அளிக்கும் தேவைபட்டியலுக்கேற்ப தீபாவளி சிறப்பு இனிப்புகள் அவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எவ்வித கட்டாயமோ, நெருக்கடியோ அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.
எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான ஆவின் சிறப்பு இனிப்புகளை சுமார் 4.5 இலட்சம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் வாங்கி, இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் படிக்க:
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வேலைவாய்ப்பு: இலவசப் பயிற்சி!
IAS அதிகாரி துணிப்பை விற்பனை இயந்திரத்தை விளக்கிய வீடியோ வைரல்
Share your comments