தேசிய தலைநகரான டெல்லியில் 40 ஆண்டுகள் இல்லாத வகையில் அதீத கனமழை கொட்டித்தீர்த்துள்ள நிலையில், அனைத்துத்துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழை தொடர்பாக டெல்லி தலைமைச் செயலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆலோசனை நடைப்பெற உள்ளது. மூத்த அமைச்சர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் யமுனையின் நீர்மட்டம் அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்சிடி மற்றும் நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.
40 ஆண்டுகளில் இல்லாத கனமழை:
தற்போதைய வானிலை நிலவரப்படி டெல்லியில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாக இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் நகரில் 107.3 மிமீ மழை பதிவாகியுள்ளது, இந்த மாதம் இதுவரை மொத்தம் 298.3 மிமீ மழை பெய்துள்ளது. இது வழக்கமாக ஜூலை மாதத்தில் பெய்யும் முழு மாதத்திற்கான மழையின் இயல்பை விட 209.7 மிமீ அதிகமாகும். நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்லியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த இரண்டு நாட்களில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நகரில் மழை நிலவரம் குறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ள அவசரக் கூட்டத்திற்கு முன்னதாக, டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், யமுனை நதியின் நீர்மட்டம் நாளை 204 மீட்டரைத் தாண்டும் என்று எதிர்பார்க்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக "அரசு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் எடுக்கும்; யமுனையின் நீர்மட்டம் 205 மீட்டரைத் தாண்டினால், அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவோம்," என்று குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில் "அனைத்து அரசுத்துறை அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் அனைவரும் களத்தில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்," என்றும் சவுரப் பரத்வாஜ் குறிப்பிட்டார்.
டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி அனைத்து பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை (இன்று) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
எனவே, பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக டெல்லி அரசின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் உடல்நிலை குறித்து பரிசோதனை நடத்தவும் கல்வித்துறை அமைச்சர் அதிஷி அறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக பிரகதி மைதான சுரங்கப்பாதை தண்ணீர் தேங்கியுள்ளதால் மூடப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி போக்குவரத்து போலீசார் கூறுகையில், பிரகதி மைதான சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் காண்க:
Share your comments