தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வட கிழக்கு பருவமழை முற்றிலுமாக முடிந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக நாள்தோறும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக ஈரோட்டில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தப்பட்சமாக நாமக்கல்லில் 17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இன்றைய வானிலை நிலவரம்:
இந்நிலையில் உள்தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் முழு விவரம் பின்வருமாறு-
26.02.2024 மற்றும் 27.02.2024: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 28.02.2024 முதல் 03.03.2024 வரை:தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
26.02.2024 மற்றும் 27.02.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் அதிக வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: (26.02.2024 மற்றும் 27.02.2024) குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு போன்று அசாம் & மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் & திரிபுரா, பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் & சிக்கிம், சத்தீஸ்கர், மேற்கு மத்தியப் பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more:
விவசாயிகளுக்கான PM kisan நிதியுதவி திட்டம்- தேர்தலுக்கு பின்பும் தொடருமா?
Share your comments