திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் அரைவட்ட சுற்றுச்சாலைப் பணிக்காக ஏரிகள் மண்ணைக் கொட்டி அழிக்கப்பட்டுள்ளனவா என்று திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். துவாக்குடி அருகேயுள்ள பறந்தான்குளம் ஏரிப் (Paranthankulam Lake) பகுதியில் ஆய்வு நடத்தினார், திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் விசுவநாதன் (Viswanathan).
அரைவட்டச் சுற்றுச்சாலை:
திருச்சி மாவட்டத்தில், கரூர் புறவழிச் சாலையில் உள்ள திண்டுக்கரை முதல் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி வரை, 42.91 கி.மீ. தொலைவுக்கு அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி (Trichy) புறவழிச் சாலை 67-க்கு உட்பட்ட பஞ்சப்பூர்- துவாக்குடி வரையிலான, 25.91 கி.மீ. பகுதி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (National Highway Authority) காரைக்குடி அலகிலும், பஞ்சப்பூர் முதல் திண்டுக்கரை வரையிலான 17 கி.மீ. பகுதி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கரூர் அலகிலும் வருகின்றன. இந்த இரு அலகுகளின் மேற்பார்வையில்தான் பணிகள் நடைபெற்று வருகின்றன.
13 ஏரிகள் அழிப்பு:
அரைவட்ட சுற்றுச்சாலைத் திட்டத்தில், அதன் வழியாக வரும் 13 ஏரிகள் மண்ணைக் கொட்டி அழிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏரிக்குள் மண்ணைக் கொட்டி சாலைகள் அமைக்க நிரந்தரத் தடை (Permanent ban) விதித்ததுடன், வேறு வழியில்லை எனில் உயர்நிலைப் பாலமாகவோ (High Bridge) அல்லது ஏரிக்கு வெளியே செல்லும் வகையிலோ சாலை அமைக்கலாம் என்று தீர்ப்பு அளித்தது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பை அலுவலர்கள் மதிக்காமல் தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றும், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ம.ப. சின்னத்துரை (Chinnadurai) உட்பட, பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் (Social welfare activists) தொடர்ந்து புகார் கூறி வந்ததுடன், போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி துவாக்குடி, பறந்தான்குளம் ஏரியையொட்டி செல்லும் சுற்றுச்சாலையில் ம.ப. சின்னத்துரை, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ். சம்சுதீன் ஆகியோர் உண்ணாவிரதம் இருந்தனர். அப்போது, அக்டோபர் 5 ஆம் தேதி கோட்டாட்சியர் தலைமையில், அமைதிப் பேச்சுவார்த்தை (Peace talks) நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யலாம் என்று அலுவலர்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை ஏற்று உண்ணாவிரதம் முடித்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அக்.5-ம் தேதி திருச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
ஏரிகளை மீட்டெடுக்க உத்தரவு:
அதன் தொடர்ச்சியாக, திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தலைமையில், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஞானமிர்தம் மற்றும் நெடுஞ்சாலை, வருவாய், வேளாண் துறையினர் அடங்கிய குழுவினர், அரைவட்ட சுற்றுச்சாலை செல்லும் பாதையில் வரும் 13 ஏரிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, சுற்றுச்சாலையின் இருபுறமும் பல ஏரிகளில் மண் கொட்டப்பட்டிருப்பதையும், சில இடங்களில் ஏரிகள் ஆக்கிரமிப்பில் (Aggression) இருப்பதையும், சில இடங்களில் திட்டத்தின்படி இல்லாமல், பணியில் குறைகள் இருப்பதையும் கோட்டாட்சியர் விசுவநாதன் கண்டுபிடித்தார். தொடர்ந்து, ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், கொட்டப்பட்டுள்ள மண்ணையும் அப்புறப்படுத்த உத்தரவிட்ட கோட்டாட்சியர், இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுத்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது பல்வேறு சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் உடன் சென்றனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
அடையாறு ஆற்றை அகலப்படுத்த, பொதுப்பணித்துறை மும்முரம்! சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி!
தாமிரபரணியில், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க சிறப்பு ஏற்பாடு!
பெரியாறு அணையிலிருந்து அக்டோபர் 7 முதல் தண்ணீர் திறப்பு! முதல்வர் பழனிசாமி உத்தரவு!
Share your comments