தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை இன்று தாக்கல் செய்கிறார்.
மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரைவையில் மிக முக்கியப் பதவியாக கருதப்படும் நிதித்துறையின் அமைச்சராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பொறுப்பேற்றார். கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் முதல் முறையாக பி.டி.ஆர் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போதே காகிதமில்லா முதல் பட்ஜெட் கூட்டத்தொடராக அது அமைந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் தேதி 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தாண்டிற்கான பட்ஜெட்டும் மின்னணு வடிவில் (இ-பட்ஜெட்) காகிதமில்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்தது முதலே வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த முறையினை போன்றே இந்த முறையும், வேளாண் பட்ஜெட்டினை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்ச்செல்வம் நாளை (21 ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வரும் 23,24,26,27 ஆம் தேதி என 4 நாட்களுக்கு பட்ஜெட் மீதான சட்டப்பேரவை உறுப்பினர்களின் விவாதம் நடைப்பெற உள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பின் நிதி அமைச்சர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் எதிர்ப்பார்க்கப்படுபவை:
2004-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமான தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு பென்சன் திட்டம் என்ற சிபிஎஸ் திட்டம் அமலில் உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டப் பலன்கள், இப்புதிய ஓய்வூதிய திட்டத்தில் இல்லை. ஆகையால் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திமுகவும் தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்து இருந்தது. வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆளும் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதைப்போல் பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம், அந்த திட்டத்தின் பயனாளிகள் யார் போன்ற விவரங்கள் இன்றைய பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. மாதம் ஒரு முறை மின் கணக்கீடு, கலைஞரின் நினைவாக பேனா சிலை வைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா என்பதும் கட்சி தொண்டர்களிடையே எதிர்ப்பார்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது தவிர்த்து விளையாட்டு துறை, தொழில் நுட்பத்துறை , புது வேலைவாய்ப்பு, தொடர்பான திட்டங்கள், அறிவிப்புகள் வெளியாகும் என இந்த பட்ஜெட்டில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும் காண்க:
விமர்சனங்களை பெற்ற அங்கக வேளாண்மை கொள்கை- விளக்கம் அளித்த வேளாண் அமைச்சர்
Share your comments