டிஜிட்டல் கடன் பிரிவில், முறைகேடுகள், தவறான செயல்பாடுகளை தடுக்கும் வகையில் புதிய நெறிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. டிஜிட்டல் கடன் சேவைகளுக்கான புதிய நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ளது. வேகமாக பிரபலமாகி வரும் டிஜிட்டல் கடன் சேவைகளை முறைப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த நெறிமுறைகள், கடன்தாரர்கள் நலன் காக்கும் அம்சங்களை கொண்டுள்ளன.
டிஜிட்டல் கடன் (Digital Loan)
டிஜிட்டல் கடன் பரப்பில் முறைகேடுகளையும், முறையற்ற செயல்பாடுகளையும் தடுக்கும் வகையில் புதிய நெறிமுறைகள் அமைந்து உள்ளன. டிஜிட்டல் கடன் சேவைகள் தொடர்பாக கடந்த ஆண்டு துவக்கத்தில் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரைகள் அடிப்படையில் ரிசர்வ் வங்கி இந்த நெறிமுறைகளை வகுத்துள்ளது.
இணையம் மற்றும் செயலிகள் வாயிலாக அளிக்கப்படும் டிஜிட்டல் கடன் சேவை அண்மை காலமாக பிரபலாகி வருகிறது. இணையம் வாயிலாக எளிதாக பெறுவது இதன் சாதகமான அம்சமாக இருந்தாலும், டிஜிட்டல் கடன் சேவை நிறுவனங்கள் சில, வாடிக்கையாளர்களிடம் முறைகேடாக நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், டிஜிட்டல் கடன் சேவையை முறைப்படுத்தும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் வரும் மற்றும் கடன் சேவை வழங்க அனுமதி பெற்ற நிறுவனங்கள், கடன் சேவைக்கு அனுமதி பெற்ற ஆனால், ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப் படாத நிறுவனங்கள் மற்றும் எந்தவிதமான கட்டுப்பாட்டு அமைப்பிற்கும் வெளியே உள்ள நிறுவனங்கள் என டிஜிட்டல் கடன் சேவை நிறுவனங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன.
புதிய நெறிமுறைகள் (New Norms)
புதிய நெறிமுறைகளின் படி, அனைத்து வகையான டிஜிட்டல் கடன்களும் நிறுவனம் மற்றும் கடன் பெறுபவரின் வங்கி கணக்கு இடையே நேரடியாக நிகழ வேண்டும். கடனை திரும்பி செலுத்துவதற்கும் இது பொருந்தும். மேலும், கடன் சேவை நிறுவனங்கள், கடன் தொடர்பான கட்டணங்கள், வட்டி விகிதம் உள்ளிட்ட விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். கடன் சேவை தொடர்பாக செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள், கடன் தாரர் வாயிலாக அல்லாமல் வங்கியால் செலுத்தப்படும்.
அதே போல, கடன் வரம்பு உயர்த்தப்படுவது, கடன் பெறுபவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது சம்மதம் பெற்ற பிறகே மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தானாக கடன் வரம்பை உயர்த்த அனுமதி இல்லை.
நுகர்வோர் பாதுகாப்பு (Consumer Protection)
கடன் சேவை செயலிகள் சேகரிக்கும் தரவுகள் தேவை அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். இந்த தரவுகள் தொடர்பாக கடன் பெறுபவரின் அனுமதியை முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, தேவை ஏற்பட்டால் இவற்றை தணிக்கைக்கும் உட்படுத்த வேண்டும். கடன் சேவை தொடர்பான புகார்களை கவனிக்க, வங்கிகள், கடன் சேவை நிறுவனங்கள் தரப்பில் உரிய அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
புகார்கள் 30 நாட்களுக்குள் பைசல் செய்யப்படவில்லை எனில், கடன் பெற்றவர் ரிசர்வ் வங்கியின் நடுநிலையாளரை நாடலாம்.மேலும் கடன் சேவை தொடர்பான தகவல்களை நிறுவனங்கள் கிரெடிட் சேவை அமைப்புகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டு உள்ளது.
புதிய நெறிமுறைகள் பயனாளிகளின் தரவு பாதுகாப்பிற்கு உதவுவதோடு, கடன் பெறுபவர்கள் நலன் காக்கும் வகையில் அமைந்து இருப்பதாக கருதப்படுகிறது. கடன் வரம்பு உயர்த்துவதற்கான சம்மதம், முறைகேடுகள் தொடர்பாக புகார் அளிக்கும் வசதி உள்ளிட்ட அம்சங்கள், டிஜிட்டல் கடன் வசதியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
Share your comments