சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்தினை தொடங்கிடத் தேவையான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மலேசியாவிலுள்ள மாநிலங்களில் பினாங்க் பகுதியில் அதிகளவிலான தமிழர்கள் வசித்து வருகின்றன. 2021-ஆம் ஆண்டில் பினாங்கு மாநிலத்தின் மக்கள்தொகை 17,74,400 எனக் கணக்கிடப்பட்டு உள்ளது. அனைத்து மலேசிய மாநிலங்களிலும் 3-ஆவது அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்ட மாநிலமாகவும் விளங்குகிறது. அந்த வகையில் பினாங்கு மாநிலம் மிகவும் நகர மயமாக்கப்பட்ட (Most Urbanised Malaysian States) மலேசிய மாநிலங்களில் ஒன்றாகுகவும் விளங்குகிறது. 2015-ஆம் ஆண்டில் நகர மயமாக்கல் நிலை 90.8%. வரலாற்று ரீதியாகவும் தமிழர்களுக்கு மிக தொடர்புடைய பகுதியாக பினாங்க் திகழ்கிறது. இந்திய நாட்டிற்கு வெளியே அமைந்துள்ள மிகப்பெரிய புகழ்பெற்ற தண்ணீர் மலை பால தண்டாயுதபாணி சுவாமி முருகன் கோவிலும் பினாங்க் பகுதியில் தான் அமைந்துள்ளது.
இந்நிலையில் தான் சென்னையிலிருந்து மலேசியாவிலுள்ள பினாங்கிற்கு நேரடி விமானப் போக்குவரத்தை அறிமுகப்படுத்த முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 11-2-2023 அன்று கடிதம் எழுதியிருந்தார்.
அக்கடிதத்தில், பினாங்கில் வாழும் தமிழர்கள் குறித்தும், பினாங்கு மற்றும் மலேசியாவின் வளர்ச்சிக்கு அவர்கள் ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பினையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு, தமிழ்நாட்டிற்கும் பினாங்கிற்கும் இடையிலான கலாச்சாரப் பிணைப்புகளையும், வர்த்தக உறவுகளையும், சுற்றுலா வாய்ப்புகள் குறித்தும் கோடிட்டுக் காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவிட் பெருந்தொற்றிற்குப் பிறகு, தற்போது சுற்றுலாத் துறையில் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பயன்படுத்திக் கொள்ளவும், தமிழ்நாட்டிற்கும் மலேசியாவுக்கும் இடையிலான வணிக உறவுகளை மேம்படுத்தவும், தமிழ் மக்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில், சென்னைக்கும் பினாங்கிற்கும் இடையே நேரடி விமானங்களை முன்னுரிமை அடிப்படையில் அறிமுகப்படுத்திடவும், தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தினைப் பரிசீலித்த ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா முதல்வரின் கோரிக்கை தொடர்பாக பதில் கடிதம் எழுதியுள்ளார். (2-3-2023) என நாள் குறிப்பிட்டுள்ள கடிதத்தில், சென்னை மற்றும் பினாங்கிற்கு இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய விமான நிறுவனங்களின் ஆதரவுடன் பன்னாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிப்பதில் ஒன்றிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிபூண்டுள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண்க:
யாரு சாமி இவரு? 20 நிமிடத்தில் 25 மாடி கட்டிடத்தை ஏறி சாதித்த குரங்கு மனிதன்
விவசாயிகளின் வாழ்விற்கான கேம் சேஞ்சர் - நானோ டிஏபிக்கு பிரதமர் வாழ்த்து
Share your comments