1. செய்திகள்

கேப்சூல் மூலம் நேரடி விதைப்பு

KJ Staff
KJ Staff
Rice capsules

நெல் விதைகளை கேப்சூல்களில் அடைத்து விதைக்கும் புதிய முறையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார் பொறியாளர் பணியை விட்டு விவசாயத்துக்கு வந்த வெங்கடேஸ்வரன்.

இந்த முறையில் மகசூல் அதிகரிப்பதோடு, நீரின் தேவையும் குறைவதாக அவர் கூறுகிறார்.

திருச்சிராப்பள்ளி அருகே உள்ள சிறுகமணியை அடுத்துள்ள காவல்காரன் பாளையத்தை சேர்ந்த அவர், தமது பொறியாளர் பணியை விட்டு விலகி நிலம் வாங்கி விவசாயம் தொடங்கும்போது இந்தப் புதிய விதைப்பு முறையை உருவாக்கி செயல்படுத்தத் தொடங்கினார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பொதுவாகவே நாற்று நடவு முறை மூலமே நெல் பயிரிடப்படுகிறது.

பல புதிய நெல் ரகங்கள் அறிமுகமாகியுள்ள போதும் நாற்று நட்டு பயிரிடும் முறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையிலிருந்து சற்றே வித்தியாசமான முறையில் நெல் சாகுபடி செய்து வருகிறார் பொறியாளர் வெங்கடேஸ்வரன்.

அதாவது நெல்மணிகளை நாற்றங்காலில் இடாமல் ஜெலட்டின் கேப்சூல்களில் இட்டு அவர் சாகுபடி செய்து வருகிறார்.

கேப்சூல்களுக்குள் இரண்டு நெல்மணிகள், இயற்கை முறையில் தயாரான வேப்பங்கொட்டை தூள், எரு, நுண்ணூட்ட சத்து மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவை நிரப்பப்படுகின்றன.

ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய சுமார் 60 ஆயிரம் கேப்சூல்கள் வீதம் தேவைப்படும் என்கிறார் வெங்கடேசன்.

கேப்சூல் விதைகளை, விவசாயத்திற்காக அணைகளில் தண்ணீர் திறக்கப் படுவதற்கு ஒரு மாதம் முன்பே புழுதி உழவு முறையில் மண்ணில் ஊன்றி விடலாம்.

தண்ணீர் திறக்கப்பட்டவுடனோ, அல்லது மழை பெய்தாலோ, கிணற்றுப்பாசனம் மூலமோ, ஈரப்பதம் கேப்சுளை நனைத்த 7 முதல் 15 நாட்களில் ஜெலட்டின் கரைந்து நெல்மணிகள் முளைக்க துவங்கி விடும். 25ம் நாட்களில் முதல் களை எடுக்க துவங்கி விடலாம்.

இந்த முறையை பயன்படுத்துவதால் நூற் பூச்சி, வேர் பூச்சி போன்ற நோய்கள் பயிரை தாக்காது என்றும், இம்முறையில் சாகுபடி செய்யும்போது நேரம், நீர் மிச்சமாவதுடன், விளைச்சல் அதிகமாவதோடு, அதிக நோய் தாக்குதலும் ஏற்படுவதில்லை என கூறுகிறார் வெங்கடேசன்.

வெங்கடேஸ்வரன் பேசுகையில், "நான் விவசாயம் செய்யும் நாள் கணக்கு மற்ற விவசாயிகளின் கணக்கை விட தெளிவாக உள்ளது. கேப்சூல் முறையில் பயிர் செய்யும்போது 90 நாட்களில் இருந்து 120 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம்." என்கிறார்.

மேலும், "நாற்றங்கால் முறைக்கு ஏக்கருக்கு சுமார் 30 கிலோ விதை நெல் தேவைப்படும். கேப்சூல் முறையில் 2600 கிராம் விதை நெல்லே போதும்." என்றும் தெரிவிக்கிறார்.

"இந்த கேப்சூல் முறை சாகுபடியை எள், கத்தரி, தக்காளி, போன்ற சிறிய விதைகளுக்கு கூட பயன்படுத்தலாம்."

"இதற்கானத் தேவை அதிகரிக்கும்போது விதை கேப்சூல் தயாரிக்கும் இயந்திரங்களில் சில மாற்றங்களை செய்து பயன்படுத்தினால் சில மணி நேரங்களில் இலட்சக்கணக்கான கேப்சூல் விதைகளை தயார் செய்துவிடலாம், " என்று தெரிவித்தார்.

மேலும் நாற்று நடும் இயந்திரத்தில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அதிக விவசாயிகள் இந்த முறையை பயன்படுத்த முடியும்.

கேப்சூல் விதைகள் ஒவ்வொன்றிலும் சுமார் 60 முதல் 80 தூர்வரை வரும். அவை அனைத்திலுமே கதிர் வைக்கும், நோய்த்தாக்குதலும் அதிகம் இருக்காது.

Venkateswaran - A farmer from Tamil Nadu

கேப்சூல் விதைகளை ஊன்றிய நானும், நாற்று நட்டு சாகுபடி செய்த இன்னொருவரும் ஒரே நாளில் அறுவடை செய்தோம், அவரை விட நான் அதிக மகசூல் பெற்றேன்" என்கிறார்.

அரசிடம் மானியம் பெறாமல் ரூ 1.5 லட்சம் சொந்த செலவில் சோலார் மூலம் மோட்டார் இயக்கி விவசாயப் பணிகளை மேற்கொள்கிறார் இவர். சமீபத்தில் மத்திய அரசிடம் விருதும் பெற்றுளார் வெங்கடேஸ்வரன்.

குறைந்த அளவு தண்ணீர், முதலீடு; ஆனால் மகசூலோ அதிகம். நெல் மட்டுமல்லாமல் அனைத்து சிறிய ரக விதைகளுக்கும் இந்த முறை பயன்படுத்தலாம்.

அதற்காக புதிய நவீன இயந்திரத்தை தயார் செய்யும் பணியில் இறங்கியுள்ளர்.

English Summary: Direct sowing with capsule Published on: 18 September 2018, 08:55 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.