மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வில்லுார் அருகே உவரி பெரிய கண்மாயில் நீர் பங்கீடு முறை குறித்த 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டறியப்பட்டது. வில்லுார் சமூக ஆர்வலர் பாலமுருகன் தகவல்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முதுகலை வரலாற்று துறை உதவி பேராசிரியரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் ஆனந்தகுமரன், தங்கப்பாண்டி, அஜய் ஆகியோர் பெரிய கண்மாயில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
நீர்ப் பங்கீடு (water distribution)
கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் பகுதியில் லிங்க வடிவமான தனித் துாணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருந்தது. இதை படி எடுத்து ஆய்வு செய்த போது கி.பி. 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நீர் பங்கீடு முறை கல்வெட்டு எனத்தெரிந்தது. முனீஸ்வரன் கூறியதாவது: நீர் பங்கீடு முறை சங்க காலம் முதல் தொன்று தொட்டு இன்றளவும் பின்பற்றி வருகிறோம்.
கலிங்கு
கலிங்கு என்பது நீரை முறைப்படுத்தி வெளியேற்ற கற்களைக் கொண்டு அமைக்கப்படும் கட்டுமானம். கலிங்கல், கலிஞ்சு என்றும் அழைக்கப்படும். கலிங்குகளில் வரிசையாக குத்து கற்களை ஊன்றி உள்பகுதியில் ஒரே மாதிரியான இடைவெளி விட்டு பலகை, மணல் மூடைகளை சொருகி நீர் வெளியேறும் அளவும், முறையும் ஒழுங்குபடுத்தப்படும். அக்காலத்தில் தனியாக கலிங்கு வாரியம் என்ற குழுவை ஏற்படுத்தி நிர்வாகம் செய்தார்கள்.
கல்வெட்டு (Inscription)
இக்கல்வெட்டில் காணியம் நீர் அளித்த பாணிக்கர் செய்த என்ற எழுத்து மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது. உவரி பெரிய கண்மாய் இருந்து நீர் நிரம்பிய பிறகு அருகே உள்ள தென்னமநல்லுார், புளியங்குளம், கண்மாய்க்கு நீரோடை வழியாக செல்லும். இவ்வூருக்கு நீரை பணிக்கர் என்ற இனக் குழுவினர் சரிபாதியாக பிரித்து கொடுத்தது இக்கல்வெட்டு மூலம் அறியலாம்.
தற்போது கண்மாயில் இருந்து கலிங்கு வழியாக மறுகால் பாய்ந்தாலும் ஒரே மாதிரியான நீர் வெளியேறும் கட்டுமானம் அமைந்திருப்பது மற்றொரு சிறப்பு என்றார்.
மேலும் படிக்க
தொண்டைமான் மன்னர் ஆட்சியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம்: கல்வெட்டு கண்டுபிடிப்பு!
Share your comments