தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், நாளை முதல் 30ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று (Corona Virus) நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நோய் பரவலைத் தடுக்க தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65000 தாண்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,500யை கடந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஏதுவாக வரும் 30ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மேலும், நோய் பரவல் அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து எஞ்சிய சில மாவட்டங்களில் வாகன போக்குவரத்திற்கும், கடைகள் திறப்பிற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மதுரை, தேனியில் ஊரடங்கு
அதேநேரத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் நோய் பரவல் அதிகரித்து வருவதை தடுக்க கடந்த 19ம் தேதியில் இருந்து வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஆனால், மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால், அங்கு இன்று (ஜூன் 24) முதல், 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நோய் பரவல் தீவிரம் காரணமாக, தேனி மாவட்டத்திலும் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதேபோல், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உட்பட பல மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அறிவிக்கும்படி அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
கொரோனா பாதிப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி வீடியோ கான்பிரன்ஸ் (Video Conference) மூலம் நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக்கு கூட்டத்தில், கொரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளைக் கடுமையாக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
முதலமைச்சர் உரை
இதைத்தொடர்ந்து, மாலை 6 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏதுவாக மாவட்ட எல்லைகள் நாளை முதல் மூடப்படும் என அவர் அறிவித்தார். மேலும், மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து நாளை முதல் ஜூன் 30ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேபோல், வெளியே செல்லும்போது அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட முதல்வர், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இனி இ-பாஸ் (E-Pass) கட்டாயம் என்றும் அறிவித்தார்.
மேலும் தனியார் கார், மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலமும் பிற மாவட்டங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்படுவதாகவும், ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரை மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இம்மாதம் கொரோனா நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
Elavarase Sivakumar
Krishi Jagran
Share your comments