நிவர் புயல் தாக்குதலையடுத்து புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை (Precautionary measures) எடுக்க முதல்வர் பழனிசாமி (CM Palanisamy) உத்தரவிட்டுள்ளார்.
நிவர் புயல் - ரெட் அலெர்ட்:
வங்க கடலில் உருவாகியுள்ள, 'நிவர்' புயல் (Nivar storm), நாளை மறுதினம், மாமல்லபுரம்- - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. இப்புயல் வீசுவதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், மிக கன மழை பெய்யும் என, வானிலை மையம் (Weather Center) அறிவித்துள்ளது. இன்று துவங்கி, வரும், 26ம் தேதி காலை வரை, மாநிலம் முழுதும், 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நிவார் புயல், வங்க கடலின் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுதினம் பகல் அல்லது பிற்பகலில், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கலாம். இந்நிலையில் புயலை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முதல்வரின் அறிக்கை:
- நிவார் புயல் பாதிப்பு எச்சரிக்கை விடப்பட்ட மாவட்டங்களில் வரும் 24, 25 தேதிகளில் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
- மறு உத்தரவு வரும் வரை நாளை மதியம் 1 மணி முதல் புதுகை, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர்,விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பஸ் போக்குவரத்து சேவையை (Transportation service) நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஆதார், ஓட்டுநர் உரிமம், ரேசன் கார்டு போன்றவற்றை நீர் படாத வகையில் பாதுகாப்பான இடங்களில் வைக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- நிவாரண முகாம்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் அத்யாவசிய பொருட்களை போதியளவு கையிருப்பில் வைக்க மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- பெரிய ஏரிகளில் நீர் கொள்ளளவு பாதுகாப்பு கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மழைநீர் கால்வாய்கள், பாலங்கள் நீர் அடைப்புகளின்றி பாதுகாப்புடன் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
- கடலோர மாவட்டங்களில் வாழ்வாதாரங்களான கட்டுமரங்கள், மின் மோட்டார் பொருத்திய படகுகள், மீன் வலைகள் ஆகியவற்றை உரிய முறையில் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.
- நீர்தேக்கத்தை உடனுக்குடன் வெளியேற்ற, பம்பு செட்டுகள் தயார் நிலையிலும், தேவையான அளவு கிருமி நாசினி (Gems Killer) தெளிக்க இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.
- மழை நீர் கால்வாய்கள் மற்றும் பாலங்கள் அடைப்புகளின்றி உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- நெல்மூட்டைகள் மழையில் நனையாதவாறு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- 1000 மின் பணியாளர்கள், கூடுதல் மின் கம்பங்கள், மின்மாற்றிகள் (Transformer) தயார் நிலையில் வைக்க வேண்டும்.
- தேசிய பேரிடர் மீட்பு படையினரின் 6 பிரிவுகள் கடலுாரிலும், 2 பிரிவுகள் சென்னையிலும் தேவையான கருவிகளுடன் தங்க வைக்க வேண்டும்.
- வீடுகளில் மின்சாதன பொருட்களை கவனத்துடன் கையாளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர்க் காப்பீடு செய்ய வங்கிகள் மூலம் கூடுதல் மையங்கள் வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!
Share your comments