மதுரை சோழவந்தான் அருகே விவசாய நிலத்தை உழுவதற்கு உழவு மாடுகள் கிடைக்காததால் மகனுடன் களத்தில் உழவு பணியை செய்து வருகிறார் ஒரு விவசாயி. வறுமை எவ்வளவு கொடியது என்பதை இந்த காட்சி மற்றுமொரு முறை உலகிற்கு உணர்த்துகிறது.
உழவுப் பணிக்கு மாடுகள்
விவசாயப் பணிகளுக்கு டிராக்டர் (Tractor) உள்ளிட்ட இயந்திரங்கள் வருகையால், தமிழக கிராமங்களில் விவசாயிகள் வீடுதோறும் வளர்த்து வந்த உழவு மாடுகளின் எண்ணிக்கை குறைந்தது. நெல் நடவு செய்வதற்கும், மக்கா சோளம், கடலை உள்ளிட்ட பயறு வகைகள் பயிரிடுவதற்கு நடவுக்கு (Planting) பணிகளுக்கு டிராக்டர் மூலம் உழவு செய்வதற்கு பதில் மாடுகளை வைத்து மேற்கொள்ளப்படும் விவசாய பணிகள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக நெல் நடவிற்கு உழுத வயலை சமன் செய்ய மாடுகள் தான் இன்றளவும் அதிகம் பயன்படுகின்றன. ஆனால், இன்றைய உலகமயமாக்கல் சூழலில் உழவு மாடுகளுக்கு தட்டுப்பாடு உள்ளதால், குறைந்த நிலங்கள் உள்ளவர்கள், தங்கள் நிலத்தை சமன் செய்ய மாடுகளுக்கு பதில் மனிதர்களே பரம்படிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
பரம்படிக்கும் பணியில் சிறுவன்:
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் முதலைக்குளம் கிராமத்தில் கண்மாய் பாசனத்தில் 400 ஏக்கர் வரை விவசாய பணிகள் நடக்கிறது. ஆனால் இக்கிராமத்தில் ஒரே ஒரு உழவு மாடுதான் உள்ளது. அதனால், இக்கிராமத்தை சேர்ந்த விவசாயி பாண்டி, தன் 50 செண்ட் வயலில் கண்மாய் பாசனத்தில் நெல் நடவு (Paddy Planting) செய்யும் பணிகளை மேற்கொண்டார். நடவிற்கு முன் வயலை பரம்படிக்க உழவு மாடுகள் வேண்டும் என நான்கு நாட்கள் காத்திருந்தும், சிறிய வயல் என்பதால் உழவு மாடுகள் கிடைக்கவில்லை. இந்நிலையில், நாற்றங்காலில் இருந்து பறித்த நெல் நாற்றுகள் வீணாகும் என்பதால் தனது 14 வயது மகன் கவியரசு உதவியுடன் பரம்படிக்கும் பணியில் ஈடுபட்டார். கம்பு மற்றும் கயிறு கொண்டு மகனுடன் சேர்ந்து அவருடைய நிலத்தில் பரம்படித்தார். குறைந்த நிலம் என்பதால் உழவு மாடுகள் வாடகைக்கு கிடைக்காதது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் வறுமை வாட்டி வதைக்கிறது. எனவே, வேறு வழியின்றி தனது மகன் உதவியுடன் வயலில் இறங்கி உழவு பணியை மேற்கொண்ட சம்பவம் காண்போரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
கரும்பு விவசாயிகளுக்கு தவணை முறையில் நிலுவைத் தொகை! மத்திய அரசின் உயர்மட்டக் குழு பரிசீலனை
உறைபனியில் இருந்து மலர்ச் செடிகளைப் பாதுகாத்த மிலார் செடிகள்!
Share your comments