தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், 'எண்டமிக்' எனப்படும் சில குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் தாக்கும் நிலையை எட்டிவிட்டதாக கருத முடியாது. வைரஸ் உருமாற்றம் அடையாமல் இருந்தால், மூன்றாவது அலை ஏற்பட்டாலும் கடுமையான பாதிப்பு இருக்காது என, நிபுணர்கள் கூறியுள்ளனர்.
நம் நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. மூன்று மாதங்களுக்கு முன், நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 ஆயிரம் என்ற அளவுக்கு பாதிப்பு குறைந்துள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி வழங்கும் பணியும் வேகமெடுத்துள்ளது. நம் நாட்டில் 100 கோடிக்கும் மேற்பட்ட 'டோஸ்' தடுப்பூசி (Vaccine) வழங்கப்பட்டுள்ளது.
துாரம் அதிகம்
இந்நிலையில், வைரஸ் பரவல் குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதாவது: நம் நாட்டில் எண்டமிக் எனப்படும், குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையை எட்டியுள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால், இரண்டாவது அலையின் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டோம் என்று கூற முடியாது. தற்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் பாதிக்கப்படுகின்றனர்; அதேபோல், பலி எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.
தடுப்பூசி வழங்குவதில் 100 கோடி டோஸ் சாதனை (100 Crores Dose Record) எட்டப்பட்டு உள்ளது. ஆனால், போக வேண்டிய துாரம் அதிகம் உள்ளது. புதிய உருமாறிய வைரஸ் ஏற்படாத நிலையில் மூன்றாவது அலை உருவானாலும், இரண்டாவது அலையைப் போல மிகத் தீவிரமாக இருக்காது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மோசமாக இருக்காது
இது குறித்து, ஹரியானா மாநிலத்தில் உள்ள அசோகா பல்கலையின் வைரஸ் மருத்துவ ஆராய்ச்சியாளர் ஷாஹித் ஜமீல் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தற்போது மூன்றாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. அதேபோல் அமெரிக்காவிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.நம் நாட்டில் உயிர் பலி 1.2 சதவீதமாக உள்ளது. இரண்டாவது அலை, எண்டமிக் நிலையை இன்னும் எட்டவில்லை. அதனால், நாம் தொடர்ந்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மூன்றாவது அலை ஏற்பட்டாலும், இரண்டாவது அலையைப் போல மோசமாக இருக்காது; சமாளிக்கக் கூடியதாகவே இருக்கும்.
பிரிட்டனின் மிடில்செக்ஸ் பல்கலையைச் சேர்ந்த, மூத்த கணித பேராசிரியர் முராட் பனாஜி கூறியுள்ளதாவது: பிரிட்டனில் செப்டம்பரில் தினசரி பாதிப்பு 30 ஆயிரமாக இருந்தது. தற்போது அது 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பலியானோர் எண்ணிக்கை, 2 சதவீதத்தில் இருந்து 0.2 சதவீதமாக குறைந்துள்ளது.
முடிவுக்கு வரவில்லை
அமெரிக்காவிலும் செப்டம்பரில் இரண்டு லட்சமாக இருந்த பாதிப்பு, தற்போது 80 ஆயிரமாக உள்ளது. பலி சதவீதத்தில் மாற்றம் இல்லை. ஆனால், நம் நாட்டில் பாதிப்பு குறைந்துள்ள போதிலும், பலி சதவீதம் குறையவில்லை. தொடர்ந்து நிலையாக பாதிப்பு இருந்து வருவதால், இரண்டாவது அலை முடிவுக்கு வந்துஉள்ளதாக கூற முடியாது.
அடுத்த சில மாதங்களில் பாதிப்பு பெரிய அளவு உயராமலும், பலி எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கைகள் தேவை. பாதிப்பு குறைந்துள்ளதால் இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதி, மெத்தனமாக இருக்கக் கூடாது என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும் படிக்க
Share your comments